பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டிப்பிடித்ததில் பின்னணி ஏதும் உள்ளதா? | The Hug controversy of Navjot Singh Sidhu

வெளியிடப்பட்ட நேரம்: 20:39 (22/08/2018)

கடைசி தொடர்பு:21:07 (22/08/2018)

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டிப்பிடித்ததில் பின்னணி ஏதும் உள்ளதா?

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து தொடர்பான சர்ச்சை கட்டுரை.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டிப்பிடித்ததில் பின்னணி ஏதும் உள்ளதா?

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வாவை கட்டித்தழுவி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமரான இம்ரான் கான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள்  கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாஃப் கட்சி, 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. சமீபத்தில், இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், இம்ரான் கான் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் மம்னூன் உசேன், பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநிலக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வாவை கட்டித்தழுவி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். சித்துவின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவரின் இந்த நடவடிக்கையை பி.ஜே.பி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இந்தச் சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ``ஒவ்வொரு நாளும் நம்முடைய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுத் தியாகிகள் ஆகின்றனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சித்து கட்டிப்பிடித்தது தவறானது. அதை, நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். நமது ராணுவ வீரர்கள், ஒவ்வொரு நாளும் கொல்லப்படுவதை சித்து உணர வேண்டும்'' என்றார்.

மோடியுடன் சித்து

பஞ்சாப் மாநிலப் பி.ஜே.பி தலைவர் வைத் மாலிக், ``பாகிஸ்தான் பிரதமர் பதவியேற்பு விழாவுக்குச் சித்து சென்றது வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். பாகிஸ்தான் ராணுவத்தினர், நம் வீரர்கள் மீது ஒருபுறம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்னொருபுறம், பாகிஸ்தான் ராணுவத் தளபதியை சித்து கட்டித் தழுவுகிறார். நமது வீரர்களைத் தாக்கி, கொன்றுவருவதற்குச் சித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிக்கு நன்றி தெரிவிக்கிறாரா'' என்று கேள்வி எழுப்பினார். 

சிரோமணி அகாலிதளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தல்ஜித் சிங் சீமா, ``ஒட்டுமொத்த நாடும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகிழ்ச்சியான எந்தவொரு நிகழ்ச்சியிலும் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளக் கூடாது. இந்த நல்லொழுக்கத்தை, சித்து உடைத்தெறிந்துவிட்டார்'' என்றார்.

ராஷ்ட்ரீய பஜ்ரங் தளத்தின் ஆக்ரா மாவட்டத் தலைவர் சஞ்சய் ஜாட், ``சித்துவின் செயலால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். இந்தச் செயலை சித்து செய்ததன் மூலம் அவர் நம்பிக்கைத் துரோகியாகியுள்ளார்" என்று குறிப்பிட்டார். மேலும், ``சித்துவின் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும். அதற்கான காசோலை தயாராக இருக்கிறது'' என்றும் வீடியோ பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இவர்களைத் தவிர, ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்ஜூம் சித்துவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியாகத் திகழும் ஆம் ஆத்மியும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சித்து மீது பீகார் மாநிலம் முசாபர்ஃபூர் நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடிக்கும் சித்து

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, ``பாகிஸ்தானில் நான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து விளக்கமளிப்பதற்கு விரும்புகிறேன். பாகிஸ்தானில் நான் மேற்கொண்ட சுற்றுப் பயணமானது, அரசியல்ரீதியிலானது அல்ல. நண்பரின் (இம்ரான் கான்) அன்பான அழைப்பை ஏற்றே பாகிஸ்தானுக்குச் சென்றேன். வாழ்நாளில் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து, கடினமான உழைப்புக்குப் பிறகு மிகவும் உயர்ந்த பதவிக்கு அந்த நண்பர் வந்துள்ளார். அந்தப் பதவியானது, அனைவராலும் மதிக்கத்தக்க மற்றும் கோடிக்கணக்கான மக்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்யும் பதவியாகும்'' என்றவரிடம், ``பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்தது ஏன்'' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர், ``அந்த நிகழ்ச்சியில் முதல் வரிசையில் நான் அமர்ந்திருந்ததைப் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியுடன் என்னருகே பாஜ்வா வந்தார். அப்போது அவர், `இந்தியாவில் உள்ள தேரா பாபா நானக்கிலிருந்து கார்டார்பூர் சாஹிப்பில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலத்துக்கு அதிநவீன சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குருநானக்கின் 550-வது பிறந்த தினத்தின்போது சீக்கியர்கள், அந்தத் தலத்தில் வழிபாடு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன' என்று குறிப்பிட்டார். குருநானக், தன் வாழ்நாளில் 18 ஆண்டுகள் தங்கியிருந்த அந்தத் தலத்தில் வழிபாடு நடத்தக் கோடிக்கணக்கான சீக்கியர்கள் காத்திருக்கின்றனர். இதைக் கேட்டதும், நான் உணர்ச்சிவசப்பட்டேன். அதைத் தொடர்ந்தே, இருவரும் கட்டிப்பிடித்து மகிழ்ந்தோம். அவருடன் தனிப்பட்ட முறையில் நான் எதையும் பேசவில்லை. இந்தச் சந்திப்பு குறித்து தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அதிருப்தியளிக்கும் வகையில் உள்ளன. அவை என்னைக் காயப்படுத்துகின்றன'' என்றார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கான், சித்துவுக்கு ஆதரவாகச் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில், ``எனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு வந்ததற்காகச் சித்துவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர், அமைதிக்கான தூதர் ஆவார். அன்புள்ளம் கொண்டவர். அவரை, பாகிஸ்தான் மக்கள் மிகவும் நேசிக்கின்றனர். சித்துவை, இந்தியாவில் விமர்சிக்கும் நபர்கள், தெற்காசியத் துணைக்கண்டத்தின் அமைதிக்கு எதிராகச் செயல்படுகின்றனர். அமைதியில்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். தெற்காசிய துணைக் கண்டத்தில் வறுமையை ஒழிக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து, பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியம். இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் வர்த்தகம் தொடங்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

சித்து மீதான விமர்சனங்கள், உண்மையிலேயே பாகிஸ்தான் ராணுவத் தளபதியைக் கட்டிப்பிடித்ததால்தான் எழுந்ததா அல்லது அதன் பின்னணியில் வேறு அரசியல் காரணங்கள் உள்ளனவா என்பதற்குக் காலம்தான் பதிலளிக்கும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்