வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (23/08/2018)

கடைசி தொடர்பு:00:45 (23/08/2018)

ஆதார் அட்டையால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு - விளக்கம் கேட்ட டெல்லி உயர் நீதிமன்றம்

ஆதார் தகவல்கள் வெளியானதால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகுறித்து பதிலளிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் விளக்கமளிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஆதார் கார்டு விவகாரம் தொடர்பாக, ஷாம்நாத் பஷீர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், 'ஆதார் உறுப்பினர்களின் தகவல்களை ஆதார் ஆணையத்தில் பாதுகாக்க முடியாமல்போவது அடிப்படை உரிமையான தனிநபர் அந்தரங்கத்தின் மீதான வன்முறை ஆகும். எனவே, ஆதார் தகவல்கள் வெளியானதால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகுறித்து நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

அந்த வழக்கு, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஆதார் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஆதார் திட்டத்தால், அரசு வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவந்துள்ளது. அதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய் சமூக நலத்திட்டங்கள்மூலம் ஏழை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது' என்று விளக்கமளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த மனு விசாரணைக்கு உகந்தது. மனுதாரரின் கேள்விகளுக்கு ஆதார் ஆணையம் ஆறு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்குமீது மீண்டும் நவம்பர் 19-ம் தேதி விசாரணை நடத்தப்படும்' என்று உத்தரவிட்டது.