வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (23/08/2018)

கடைசி தொடர்பு:08:08 (23/08/2018)

ஒரு கிலோ 9 ஆயிரம் ரூபாய் - சூரத்தில் விற்பனைக்கு வந்த தங்கத்தினாலான இனிப்பு

இந்தியாவில் கொண்டாடப்படும் அனைத்து பண்டிகைகளிலும் இனிப்புகளுக்கு மிக முக்கிய இடமுண்டு. வீட்டிலோ அல்லது கடையிலோ அதற்கென சிறப்பு இனிப்பு வகைகள் தயார் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள ஒரு கடையில் புது விதமான இனிப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இனிப்பு

`24 காரட் மிட்டாய் மேஜிக்' என்ற அந்தக் கடையில் ஒரு கிலோ இனிப்பு 9,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதற்குக் காரணம் அவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான பொருள்தான். இந்த இனிப்பின் மேற்பகுதியில் 24 கேரட் தங்கத்தினாலான மெல்லிய தகடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சகோதர பாசத்தின் பெருமையை உணர்த்தும் விழாவான ரக்‌ஷா பந்தன் வடமாநிலங்களில் கொண்டாடப்படும் பிரபலமான விழாக்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வருடத்தில் ரக்‌ஷா பந்தன் விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த இனிப்புகளின் விற்பனை தற்பொழுது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

தங்கம்

விலை அதிகமாக இருந்தாலும்கூட இவற்றை வாங்குவதற்கு மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இருப்பதாகக் கடையின் உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் தங்கத்தை  சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து வைத்திருப்பதுதான் என்றும் கூறுகிறார்கள்.