வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (23/08/2018)

கடைசி தொடர்பு:07:42 (23/08/2018)

சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு!

பாகிஸ்தான் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொடர்பான வழக்கின் விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

குல்பூஷன் ஜாதவ்

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், பலுசிஸ்தான் மாகாணத்தில் வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறி, கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தான் ராணுவத்தால், ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2017, ஏப்ரல் மாதத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனைக்கு எதிராக,  ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தை, இந்திய அரசு அணுகியது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால், அவரது மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம்  நிறுத்திவைத்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தானின் குற்றச்சாற்றை இந்தியா முழுவதுமாக மறுத்தது. குல்பூஷன் ஓய்வுபெற்ற பிறகு இரான் நாட்டில் தொழில் தொடங்குவதில் ஆர்வமாக இருந்ததாகத் தெரிவித்தது. அப்போது கடத்தப்பட்ட அவர் பின்னர் பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்தது என வாதிட்டது. இரண்டு நாடுகளும் தங்களின் வாதங்களை எழுத்துபூர்வமாகவும் தாக்கல் செய்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், சர்வதேச நீதிமன்றம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 19 முதல் 25 வரை, வாரம் முழுவதும் தினமும் இந்த வழக்கின் விசாரணையை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாக இதன் தீர்ப்பும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. குல்பூஷன் ஜாதவை மீட்கக் கடைசி முயற்சியாக இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் இந்த வழக்கின் அடுத்தகட்ட  விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.