``திருமணம் அப்புறம்... நிவாரணப் பணியே இப்போது முக்கியம்!'' - நடிகரின் கருணை முகம்

கேராளவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தன் திருமணத்தை நிறுத்தி விட்டு  ராஜீவ் பிள்ளை என்ற நடிகர் மீட்புப்பணியில் ஈடுபட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருமணம்  -நடிகர்  ராஜீவ் பிள்ளை

மலையாள படங்களில் நடித்து வருபவர் ராஜீவ் பிள்ளை. 'ஆம்பள', 'தலைவா' போன்ற தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  கேரளாவில் திருவல்லா அருகே நன்னூரில் வசித்து வந்த இவருக்கும் அலுவாவைச் சேர்ந்த அஜிதா என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் நிச்சயம் செய்யப்பட்டது.  இவருக்கு 4 நாள்களுக்கு முன் திருமணம் நடைபெறவிருந்தது. உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் கேரளாவை மழை வெள்ளம் புரட்டிப் போட ராஜீவ் பிள்ளை தன் திருமணத்தை ஒத்தி வைத்தார்.  

திருமணத்தை ஒத்தி வைத்த ராஜீவ் பிள்ளை அதன் பிறகு செய்ததுதான் ஆச்சர்யம். திருமணத்தை ஒத்திப் போட்டதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. களத்தில் இறங்கி மீட்புப்பணியிலும் ஈடுபட்டார்.  மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்று உணவு, உடைகள் வழங்கினார். சுமார் 48 மணி நேரம் விடாமல் தண்ணீருக்குள் சுழன்று மீட்புப்பணியில் அவர் ஈடுபட்டார். 

``திருமணம் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். தற்போது உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுவதே முக்கியம். என் கிராமத்தில் என் வீட்டைச் சுற்றி சில 100 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகள் வரை நீரில் மூழ்கி விட்டன. என் வீடு சற்று உயரமான பகுதியில் இருந்ததால் வெள்ளத்தில் இருந்து தப்பித்தது. இங்கே படகுகளும் இல்லை. மரங்களை இணைத்து படகுகள் போல செய்து தண்ணீரில் தத்தளித்தவர்களை நானும் நண்பர்களும் மீட்டோம். வெள்ளம்  வடிந்த பின் மக்கள் துயரம் தீர்ந்த பிறகு அடுத்த மாதத்தில் திருமணம் வைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளேன்'' என்கிறார் ராஜீவ் பிள்ளை 

தற்போது ஷகீலா வாழ்க்கை வரலாறு படத்தில் ராஜீவ் பிள்ளை நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருடன் நடிக்கும் ரிச்சாசாதா, ராஜீவ் பிள்ளை நிவாரணப்பணிகளில் ஈடுபடும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!