அசாத்தியமாகச் செயல்பட்ட மீட்புப் படையினர் - கௌரவிக்கும் கேரள அரசு

கேரள வெள்ளத்தின்போது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களை வரும் 26-ம் தேதி கௌரவிக்கவுள்ளது கேரள அரசு. 

மீட்புப் படையினர்

Photo Credits : Twitter/@SadhguruJV

பெரிய பேரிடர்கள் நிகழும்போது அதிலிருந்து மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல் படையினர், துணை ராணுவப் படையினர் போன்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அதேபோன்று கேரள வெள்ளத்தின்போதும் இவர்களே சூப்பர் ஹீரோக்கள் போன்று செயல்பட்டு பல லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளனர். சற்றும் எதிர்பாராத தென்மேற்குப் பருவ மழையால் கேரளா முழுவதும் ஸ்தம்பித்தது. மழை, வெள்ளம் என அனைத்து இயற்கை பேரிடர்களும் கேரள மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. இந்த இடரில் இருந்து மக்களுக்கு தோள்கொடுத்து உதவியுள்ளனர் மீட்புப் படையினர். ஹெலிகாப்டர்கள், படகுகள், ரப்பர் படகுகள் உள்பட தங்களுக்கு கிடைத்த அனைத்தையும் கருவியாக பயன்படுத்தி பெரும் சாதனை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் இந்த வீரர்கள். 

மீட்புப் படையினர்

Photo Credits : Twitter/@tfcnews1

மக்களை மீட்கும் பணிகள் ஒரு புறம் நடைபெற மற்றொரு புறத்தில் நிவாரணப் பொருள்களும் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தன. மிக மோசமான வானிலையிலும் ஹெலிகாப்டர் செல்லமுடியாத பகுதிகளுக்கும் சென்று மக்களை மீட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணை மீட்டது, மாடியில் ஹெலிகாப்டரை இறக்கி 26 பேரின் உயிர்களைக் காப்பாற்றியது எனப் பல அசாத்தியமான செயல்களையும் எளிதாக முடித்துள்ளனர். இதுவரை சுமார் 12.10 லட்சம் மக்களை மீட்டுள்ளனர். 

மீட்புப் படையினர்

Photo Credits : Twitter/@rajeshpadmar

இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கௌரவிக்கும் வகையிலும் வரும் 26-ம் தேதி கேரள அரசால் ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த 14 நாள்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் வடிந்ததால் முகாம்களில் இருந்து மக்கள் தங்க வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். கேரளாவில் தற்போது நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை முதல்வர் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்புப் படையினர்

Photo Credits : Twitter/@SadhguruJV

மேலும் செங்கனூர், கோழஞ்சேரி, ஆழப்புலா, பருவூர், சாலக்குடி போன்ற இடங்களில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களை இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்திக்க உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!