''கருவறையில் சில்மிஷம் செய்தபோது, கடவுள் ஏன் கொதித்தெழவில்லை?” சுந்தரவள்ளியின் ஆதங்கம் | Prof. Sundharavalli slams regarding controversial speech on Kerala floods

வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (23/08/2018)

கடைசி தொடர்பு:11:25 (23/08/2018)

''கருவறையில் சில்மிஷம் செய்தபோது, கடவுள் ஏன் கொதித்தெழவில்லை?” சுந்தரவள்ளியின் ஆதங்கம்

தமிழகத்தில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டப்போ ஏன் உங்க சாமி தட்டிக்கேட்கலை. கோயில் கருவறையிலே சில்மிஷம் நடந்தபோது அந்தச் சாமி பொங்கி எழுந்து தமிழகத்தையே துவம்சம் பண்ணியிருக்கலாமே. தலித்துகளைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் ஆடைகளை உருவியபோது எந்தச் சாமி கோபப்பட்டு தமிழகத்தை அழிச்சது?

''கருவறையில் சில்மிஷம் செய்தபோது, கடவுள் ஏன் கொதித்தெழவில்லை?” சுந்தரவள்ளியின் ஆதங்கம்

ன்றளவும் வெள்ளத்தின் கோரத்தாண்டவம், கேரள மக்களை ஒருவித பதைபதைப்பிலேயே வைத்திருக்கிறது. மழை நின்று வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தாலும், தங்கள் உறவுகளையும் நட்புகளையும் செல்லப்பிராணிகளையும் இழந்து தவிக்கும் மக்களின் முகத்தில், சோகத்தின் வடு நீங்கியபாடில்லை. வெள்ளம் தன் போக்கில் கிடைத்தவற்றைச் சுருட்டிக்கொண்டு போக, உள்ளத்தின் வலுக்கொண்டு அனைத்தையும் மீட்டெடுக்கும் முயற்சியில் அரசோடு கைகோத்து ஓயாது உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

அவர்களோடு கரம்சேர்த்து நகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்திருக்கும் இந்த வேளையில், மனிதத்துவத்தைப் போற்றாமல் கேரள வெள்ளத்துக்குக் காரணம், ஐயப்பனின் கோபம்தான் எனப் பொங்கியுள்ளனர் ஒரு தரப்பினர்.

ஐயப்பன் கோவில்

 

இதுகுறித்து பல விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது மூடநம்பிக்கையின் உச்சம் என மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் குரல் கொடுத்தனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் பேராசிரியர் சுந்தரவள்ளி. அவ்வளவுதான்... அவரை ஆபாசக் கருத்துகளால் தாக்க ஆரம்பித்துள்ளது ஒரு குழு. ஃபேஸ்புக், மொபைல் என அவரைத் தொடர்புகொண்டு வசை பாடித் தீர்க்கிறார்கள். அத்தனையையும் தன் கருத்தின் மூலம் எதிர்கொண்டு வருகிறார் சுந்தரவள்ளி.

நாம் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோதுகூட ``யார் பேசறது?'' எனப் படபடத்தவர், விஷயம் தெரிந்ததும், கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுடன் தொடர்கிறார்.

சுந்தரவள்ளி

``மன்னிச்சிடுங்க தம்பி. தொடர்ந்து ராங் கால் வந்துட்டே இருக்கு. அசிங்க அசிங்கமா திட்டுறாங்க. அதான் உங்க அழைப்பையும் அப்படி எதிர்கொண்டேன். கேரளாவில் வெள்ளத்திலிருந்து உயிரைக் காப்பாத்திக்க மக்கள் ஓடிட்டிருக்கும் நேரத்தில், `ஐயப்பன் கோயிலுக்குள்ளே பெண்களை விடலாம்னு சொன்னதால்தான் இந்த நிலை'னு சில விஷமிகள், மரணத்திலும் குளிர் காயறாங்க. எனக்குள் ஏற்பட்ட அந்தக் கோபத்தால்தான் `தன்னையே காப்பாத்த துப்புக்கெட்ட ஐயப்பனுக்குத் தீட்டு ஒரு கேடா?'னு முகநூலில் பதிவிட்டேன். உடனே 700-க்கும் மேற்பட்டவங்க ஷேர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்துத்துவா அமைப்பினர்கள் பொங்கி எழுந்தாங்க. இப்படியெல்லாம் எழுதுறவங்களை முடக்கிப்போடணும்னு, பாலியல் ரீதியிலான தாக்குதல்களை ஆரம்பிச்சுட்டாங்க.

இப்படி ஐயப்பனுக்கு ஆதரவா கொதிப்பவர்களிடம் ஒரு கேள்வி கேட்கறேன். தமிழகத்தில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டப்போ ஏன் உங்க சாமி தட்டிக்கேட்கலை. கோயில் கருவறையிலே சில்மிஷம் நடந்தபோது அந்தச் சாமி பொங்கி எழுந்து தமிழகத்தையே துவம்சம் பண்ணியிருக்கலாமே. தலித்துகளைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் ஆடைகளை உருவியபோது எந்தச் சாமி கோபப்பட்டு தமிழகத்தை அழிச்சது, இப்படி எதையுமே தட்டிக்கேட்காத கடவுள் கேரளாவை மட்டும் தண்டிச்சதா, இதைத்தான் மூடநம்பிக்கைனு சொல்றேன். வெள்ளத்துக்குக் காரணம், ஐயப்பன் இல்லே. தொடர்ந்து ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும், கேரளாவின் குறுகிய நிலப்பரப்பும்தான். இதைச் சொன்னதுக்காக இப்படிச் சீண்டறாங்க'' எனக் கொதிப்புடன் தொடர்கிறார் சுந்தரவள்ளி.

கேரளாவைத் தாக்கிய வெள்ளம்

``சமூக வலைதளத்தில் ஆவேசப்பட்டு கொதிக்கும் இவர்கள், கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா. சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை, பொதுத்தளத்தில் நீங்கள் பகிரும்போது அது சரியானது இல்லை. தவறு என்று ஒரு பெண் சொன்னால், அந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்துடன் வாதிடணும். அதைவிடுத்து, பாலியல் தொழிலாளி போன்ற முத்திரையைக் குத்தி அசிங்கப்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களின் கையாலாகாதத்தனம். ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியில் சீண்டினால், மானத்துக்கு பயந்து வாயை மூடி ஓடிவிடுவாள் என நினைக்கிறார்கள். நான் இடதுசாரியைச் சேர்ந்தவள். எதற்கும் அஞ்சாமல் என் கருத்தை ஆணித்தரமாக முன்வைப்பேன். இதுபோன்ற மூடநம்பிக்கைகளைத் தொடர்ந்து மிகத் தீவிரமாக எதிர்ப்பேன். அவர்களோ எங்களை அவமானப்படுத்துவதாக நினைத்து தங்களையே அம்பலப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்றவர்களை அடையாளம் கண்டு இந்தச் சமூகம் துரத்தியடிக்க வேண்டும். பெண்ணைப் பாலியல் ரீதியாக தாக்காமல், கருத்தால் எதிர்கொள்ளும் அறிவை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார் ஆதங்கத்துடன்.

இயற்கையின் ஆற்றலுக்கு முன்பு, வாயடைத்து நிற்கும் மனித சக்தியால் உதவிக்கரம் நீட்டுவதே அதிகபட்ச செயல்பாடாக இருக்கும். இந்த நேரத்தில், தங்களின் நம்பிக்கையை மற்றவர்களிடம் திணிக்க நினைப்பது மனிதநேய செயல் அல்ல. வேதனையில் வாடும் கேரள நண்பர்களின் கரம் பற்றுவோம். நம்பிக்கை கொடுப்போம்.

 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close