வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (23/08/2018)

கடைசி தொடர்பு:12:45 (23/08/2018)

நிறுவனம் கொடுத்த சம்பளத்தால் அதிர்ச்சி - உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஊழியர்

ஆக்ராவில் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு மாதச் சம்பளமாக ரூ.6 கொடுக்கப்பட்டதால் விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை

ஆக்ராவில் உள்ள ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் அங்கு தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய காவல்துறையினர், ``தற்கொலைக்கு முயன்ற நபர் கடந்த சில வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த ஜூலை மாதம் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவச் செலவுகளை அந்த நிறுவனமே ஏற்றுள்ளது. காயங்களில் இருந்து மீண்டவர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், தனக்கு வர வேண்டிய மாதச் சம்பளத்தைக் கேட்டுள்ளார். அப்போது நிறுவனம் தரப்பில் மாதச் சம்பளமாக ரூ.6 கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுக்கான தொகையைத் தனது சம்பளத்திலிருந்து மாதத் தவணையில் பிடித்தம் செய்துகொள்ள தெரிவித்துள்ளார். நிர்வாகம் அவரது கோரிக்கையை ஏற்காததால் மனமுடைந்தவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்'' எனத் தெரிவித்தனர்.

காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்று தவணை முறையில் பணத்தைப் பிடித்தம் செய்துகொள்ள ஷூ தயாரிக்கும் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து இதுவரை வழக்கு பதிவு ஏதும் செய்யப்படவில்லை.