கேரளா வெள்ளத்தில் சிக்கிய விலங்குகள்... காப்பாற்றக் களமிறங்கிய சென்னை இளைஞர்கள்! #KeralaFloods | Kerala flood: Chennai Youngsters rescues animals

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (23/08/2018)

கடைசி தொடர்பு:15:24 (23/08/2018)

கேரளா வெள்ளத்தில் சிக்கிய விலங்குகள்... காப்பாற்றக் களமிறங்கிய சென்னை இளைஞர்கள்! #KeralaFloods

சேதமடைந்த சாலைகள், மடிந்துபோன பயிர்கள், பறிபோன உயிர்கள், நாசமடைந்த உடைமைகள் என்று பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, பெரும் துயரில் இருக்கிறது கடவுளின் தேசம்.

கேரளா வெள்ளத்தில் சிக்கிய விலங்குகள்... காப்பாற்றக் களமிறங்கிய சென்னை இளைஞர்கள்! #KeralaFloods

சேதமடைந்த சாலைகள், மடிந்துபோன பயிர்கள், பறிபோன உயிர்கள், நாசமடைந்த உடைமைகள் என்று பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெரும் துயரில் இருக்கிறது கடவுளின் தேசம். வெள்ளத்தில் சிக்கிய மனிதர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதுமிருந்து அவர்களுக்கு உதவிக் கரம் நீண்டு வருகிறது. இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த மனிதர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டிவிட்டது. ஆனால், இந்த வெள்ளத்துக்கு மனிதர்களை விட அதிக உயிர் பலியாகியிருப்பது  விலங்குகள்தாம். 

கேரளா நாய்கள்

தற்போதும், ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில், வீடுகளில் மாடு, ஆடு, நாய், பூனைகளின் சடலங்களை காணலாம். பல இடங்களில் இந்த விலங்குகளின் நிலை என்ன ஆனதென்றே தெரியவில்லை என்கின்றனர். சாலைகளில் திரியும் நாய்கள் ஒருவித பதற்றத்தில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி உணவுகள் இல்லாமல் மாடுகளும் ஆடுகளும் எலும்பும், தோலுமாக ஆகிவிட்டன.தங்களது வீடுகளில் ஒருவராக வளர்ந்த இந்த விலங்குகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. இந்நிலையில், சென்னையிலிருந்து சென்ற ஓர் இளைஞர் கூட்டம், வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனைகளை மீட்டு வருகின்றனர். 

இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் விலங்குகள் நல ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன், ``எங்கு வெள்ளம் ஏற்பட்டாலும் அங்கு விலங்குகளைக் காப்பாற்ற நாங்கள் சென்றுவிடுவோம். ஏற்கெனவே, சென்னை பெரு வெள்ளம், உத்தரகாண்ட், அஸ்ஸாம் வெள்ளங்களில் பணியாற்றியிருக்கிறோம். பேரிடரில் பணியாற்றிய நல்ல அனுபவம் உள்ள இளைஞர்கள்தாம் அங்குச் சென்றிருக்கின்றனர். வெள்ளத்தில், அந்த விலங்குகளுக்குப் பல்வேறு வகையான நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அவற்றை மீட்டு சிகிச்சை அளிப்பது, உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை முடித்துவிட்டு, தற்போது ஆலப்புழா செல்கின்றனர். சென்னையில் இருந்துகொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை நான் செய்து வருகிறேன்.

கேரளா நாய்கள் மீட்பு

இந்தப் படம் ஷ்ரவன் கிருஷ்ணன் முகநூல் பக்கத்தில் பதிந்திருந்தது.

நம்மைப் போலவே, புனே, பெங்களூரு, கேரளாவில் இருக்கும் அணியினருடன் ஒருங்கிணைந்து இந்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்காக, வாட்ஸ்அப் க்ரூப் ஒன்று இருக்கிறது. விலங்குகளை மீட்பதற்காக, ஹெல்ப்லைன் நம்பரை அறிவித்துள்ளோம். நம் அணியினர் பாம்புகளை கூட மீட்கும் அளவுக்குப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ, வெள்ளங்களில் பணியாற்றியிருக்கிறோம். ஆனால், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில்தான் பாதிப்புகள் அதிகம். உணவு, தங்குமிடம், களப்பணி என எல்லாமே சவாலாகத்தான் இருக்கிறது. அதையும் தாண்டி, தங்களது பணிகளைவிட்டு விட்டு,ஐ.டி உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள், விலங்குகளைக் காப்பாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளனர்" என்றார்.

கேரளாவில் உள்ள பல கோழிப் பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. உயிரிழந்துள்ள விலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கே எடுக்க முடியாது என்கின்றனர். 

திருச்சூரில் 25-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்துவருகிறார் சுனிதா என்ற பெண். அவரது பகுதியில் மீட்புப் பணி நடந்துகொண்டிருந்தபோது, ``நாய்களை வெளியேற்ற தங்களால் முடியாது'' என்று தன்னார்வு அமைப்பினர் கைவிரித்துவிட்டனர். ``நாய்கள் இல்லாமல் நான் வரமாட்டேன்" என்று சுனிதா வெளியே வர மறுத்துவிட்டார். இதையடுத்து, விலங்குகள் நல அமைப்பின் மூலமாக  நாய்களுடன் வெளியே வந்திருக்கிறார் சுனிதா.

இடுக்கி மாவட்டத்தில், நிலச்சரிவு ஏற்பட்டபோது, தொடர்ந்து சத்தமிட்டு அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுத்து காப்பாற்றியிருக்கிறது ஒரு நாய். வெள்ளத்தில் சிக்கிய நாயை, தங்களது உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். கழுத்துவரை இருக்கும் வெள்ளத்தில், ஒரு பாத்திரத்தில் தனது வளர்ப்பு நாயை தூக்கிச் சென்ற சிறுமியின் போட்டோ வைரலானது. 

கேரளா நாய்கள்

மாடுகளுக்கு உணவு வழங்குவதற்காகப் பல அமைப்பினர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். கேரளாவில் வெள்ளம் பாதிப்பு தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது, வயநாடு மாவட்டம், பனைமரம் பகுதியில் கொட்டும் மழையிலும், ஒருவர் தனது மாட்டுக்கு உணவு வைத்துக்கொண்டிருந்த காட்சியை நாம் பார்க்க முடிந்தது. தனது வாழ்நாள் முழுவதும், மனிதனுக்கு விசுவாசமாக இருக்கும், அந்த உள்ளங்களுக்கு நாம் காட்டவேண்டிய அறம் அது.

கேரளாவில் விலங்குகளை மீட்பதற்கு +919167466569 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
 


டிரெண்டிங் @ விகடன்