வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்... முகாமாக மாறிய மசூதி... இந்து குடும்பங்களை அரவணைத்த இஸ்லாமியர்கள்

இயற்கை பேரிடர் அல்லது போர் உள்ளிட்ட ஆபத்தான நேரங்களில், ஒன்றிணைதல் அல்லது பிரிதல் ஆகிய இரண்டு காரணிகளை நோக்கித்தான் மனித இயல்பு நகர்கிறது. இதேபோல், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் சமத்துவத்துக்கான பல உதாரணங்களைத் தற்போது எடுத்துக்காட்டியுள்ளது. 

கேரளா வெள்ளம்

கேரளாவில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய மழை படிப்படியாக அதிகரித்துத் தீவிரமடைந்தது. இதனால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வெள்ளம் புகுந்த மாவட்டங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலப்புரமும் ஒன்று. அதிலும், மாவட்டத்தின் வடக்குப் பகுதிகள் முற்றிலுமாக வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. சாலியர் கிராமத்தில் உள்ள அகம்படம் பகுதியில் இருந்த வீடுகளில் வெள்ளம் ஆக்கிரமித்தது. இப்படி, இக்கட்டான நிலையில்தான் அந்த நிகழ்வு நடந்துள்ளது. அப்பகுதியில், உள்ள ஜுமா மஸ்ஜித் என்ற மசூதி முகாமாக மாறியுள்ளது. 

மசூதி - மலப்புரம்

Photo Credit - twitter@tourism_kerala

இதுகுறித்து, சாலியர் பஞ்சாயத்து தலைவர் பி.டி.உஷ்மான் கூறுகையில், கடந்த 8-ம் தேதியிலிருந்து கொட்டித் தீர்த்த கனமழையால், வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், வீட்டைவிட்டு வெளியேறிய மக்களைப் பாதுகாப்பாக மசூதியில் தங்க வைத்தோம். குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என 78 பேர் முகாமில் உள்ளனர். இங்கு, 17 இந்து குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான, உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம். மேலும், 26 குடும்பங்கள் மசூதியில் பாதுகாப்பாக இருக்கத் தஞ்சம் கோரினர். அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்களே. தற்போது, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால், மசூதியில் தங்கியிருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பச் சென்றுள்ளனர்' என்றார். 

முன்னதாக, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இந்து கோயில்களில் தூய்மைப் பணியில் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி நெகிழச் செய்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!