வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (23/08/2018)

கடைசி தொடர்பு:17:25 (23/08/2018)

`கேரள சகோதரிகளுக்கு சென்றுசேரட்டும்!' - சேமிப்புப் பணத்தை அள்ளிக்கொடுத்த 4 வயது சிறுமி

கன மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, தான் சேமித்துவைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார், கொல்கத்தாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி. 

கேரளாவுக்கு நிவாரண நிதி

Photo Credit-facebook@cpimwbpc

கேரளாவை புரட்டிப்போட்ட மழையால், தங்கள் உடைமைகளை இழந்து மக்கள் தவித்துவருகின்றனர். அவர்களுக்கு, அண்டை மாநிலங்களில் இருந்தும் உலக நாடுகளில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியான அபராஜிதா சஹா, தான் சேமித்துவைத்திருந்த 14,800 ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். நடனத்தில் ஆர்வம் கொண்டவரான அந்தச் சிறுமி, தனது பிறந்தநாளுக்கு உறவினர், நண்பர்கள் அளித்த பணத்தைக்கொண்டு சி.டி ப்ளேயர் வாங்கத் திட்டமிட்டிருந்தார். அதன்மூலமாக, நடனம் கற்றுக்கொள்ளும் முடிவில் இருந்தார். 

இந்நிலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைக் கண்ட சிறுமி, தான் சேமித்துவைத்திருந்த ரூ.14,800-ஐ நிவாரண நிதியாக அம்மாநில சி.பி.எம் தலைவரிடம் நேரில் வழங்கியுள்ளார். இதுகுறித்து அபராஜிதா சஹா கூறுகையில், ``கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு இந்தப் பணம் சென்றடையட்டும்'' என்றார்.