`வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்'- உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய கேரள அரசு!

``கேரள வெள்ளப் பாதிப்புக்கு தமிழகமும் ஒரு காரணம்'' என்று உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கூறியுள்ளது. 

முல்லைப்பெரியாறு

வெள்ளப் பாதிப்புகளில் இருந்து கேரளம் மீளத் தொடங்கியுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் எனப் பலரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் பெய்த மழையால், முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராயி, தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமருக்கும் கடிதம் எழுதினார். இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரசுல் ஜாய் என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

வழக்கு விசாரணையில், ``நீர்மட்டத்தைக் குறைப்பதுகுறித்து அணை துணைக் கண்காணிப்புக் குழு முடிவுசெய்துகொள்ளும். இதற்கு தமிழக, கேரள அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

அதில், ``சரியான நேரத்தில் முறையாக, கவனமாக முல்லைப்பெரியாறு அணையின் நீரைத் திறந்து விட்டிருந்தால் கேரள வெள்ள பாதிப்பை பெருமளவு குறைத்திருக்க முடியும். கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர ஆரம்பித்தது. அப்போது கேரள அரசின் தலைமை செயலர், தமிழக அரசின் தலைமை செயலரைப் போனில் தொடர்புகொண்டு பேசினார். அணையில் இருந்து தண்ணீரை படிப்படியாகத் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகஸ்ட் 14ம் தேதி 137 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 15ம் தேதி காலை வேகமாக அதிகரித்தது. இதனால், வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. அதே நாள் காலை 8 மணிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால் இடுக்கி அணைக்குக் கூடுதலாக தண்ணீர் வந்தது. எனவே இடுக்கி அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து உரிய முறையில் தண்ணீர் திறந்திருந்தால் இடுக்கி அணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது” என்றும், “முல்லைப்பெரியாறு அணை பலவீனமானது. அதில் 142 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆதாரமற்ற வாதத்தைக் கேரள அரசு தெரிவித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டிய நேரம், கேரளா முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அடுத்த இரண்டு நாள்களில் மழையும் ஓய்ந்துவிட்டது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்டது தான் வெள்ளத்திற்குக் காரணம் என்று கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இடுக்கி அணையைக் குறை கூற மனம் இல்லாமல் முல்லைப்பெரியாறு அணையைக் குற்றம் சொல்வது நியாயம் இல்லை.” என்கின்றனர் தேனி மாவட்ட விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!