`அப்படியானால் நீங்களே அந்த நிதியைக் கொடுங்கள்!’ - பிரதமர் மீது பாயும் கம்யூனிஸ்ட்டுகள் #KeralaFloods

`கேரள வெள்ளப் பாதிப்புகளுக்காக வெளிநாடுகள் மனித நேயத்துடன் அளிக்க முன் வரும் நிவாரண நிதி உதவிகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்’ என்னும் கோரிக்கை வலுத்து வருகிறது.  

கேரளா
 

கேரளா வெள்ள நிவாரணத்துக்காக யு.ஏ.இ, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் வழங்கிய நிதியை மத்திய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. `கேரளாவுக்கு வெளிநாடுகள் வழங்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு ஏற்க வேண்டும்’ எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்நிலையில் சி.பி.ஐ கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, வெளிநாடு நிதிகள் விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

சுதாகர் ரெட்டி
 

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `இயற்கை பேரிடர் சமயங்களில் வெளிநாடுகள் அளிக்கும் நிதிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்ற மரபை 2004-ம் ஆண்டிலிருந்து இந்திய அரசு கடைப்பிடிக்கிறது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் இந்த முடிவை எடுத்தது. அவர்களின் கொள்கைதான் தற்போது வரை பின்பற்றுப்பட்டு வருவதாக இப்போதைய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இது மத்திய அரசு தெரிவிக்கும் போலி காரணம் என்றே தோன்றுகிறது. இயற்கை பேரிடரை சந்திக்கும் நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வது இயல்பான ஒன்றுதான்.

நேபாளம், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் இந்தியா நிவாரண நிதியளித்து உதவியது. பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதுகூட இந்தியா உதவியது. ஆனால், இப்போது மறுப்பது போலி கெளரவத்துக்காக மட்டுமே. வெளிநாட்டு நிதி தேவையில்லையென்றால் கேரளா அரசு கேட்ட நிதியை மத்திய அரசே வழங்க வேண்டும். கேரளாவில் கிட்டத்தட்ட ரூ.20,000 கோடி மதிப்புள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு மத்திய அரசிடம் மொத்த தொகையையும் கேட்கவில்லை. ரூ.2,600 கோடி தான் கேட்கிறது. அதைக் கொடுத்துவிட்டு வெளிநாட்டு நிதிகளை மறுக்கட்டும்’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!