145 கேப்ஸ்யூல்... 10 கோடி ரூபாய் மதிப்பு.. வயிற்றில் வைத்து போதைப்பொருள் கடத்திய இருவர் கைது!

பாதுகாப்பு எவ்வளவுதான் அதிகமாக இருந்தாலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் போதைப்பொருள் கடத்தல் என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தங்களது உயிரையும் பணயம் வைத்து சிலர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அப்படி போதைப்பொருள்களை அவர்களது உடலுக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்த வெளிநாட்டினர்கள் இரண்டு பேர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று பரிசோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இரண்டு வெளிநாட்டினரைக் கைது செய்தார்கள். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் இந்தியாவுக்குப் போதைப்பொருள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. பொலிவியா மற்றும் கென்யாவைச் சேர்ந்த அவர்கள் இருவரும் எதியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து வந்திருக்கிறார்கள்.

அவர்களின் வயிற்றில் போதைப் பொருள் அடங்கிய கேப்ஸ்யூல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே அவர்களின் வயிற்றில் இருந்த கேப்ஸ்யூல்களை வெளியே கொண்டு வருவதற்கு 4 நாள்கள் தேவைப்பட்டது. பொலிவிய நாட்டைச் சேர்ந்தவரின் வயிற்றில் இருந்து 89 கேப்ஸ்யூல்கள் வெளியேற்றப்பட்டன. அதன் மொத்த எடை 890 கிராம். கென்யாவைச் சேர்ந்தவரின் வயிற்றில் இருந்து 842 கிராம் கொண்ட 56 கேப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டது. இருவரின் வயிற்றிலும் இருந்த கோகைனின் அளவைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மொத்தம் 145 கேப்ஸ்யூல்களிலும் இருந்த போதைப்பொருளின் மொத்த எடை 1.7 கிலோ. இதன் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!