வெளியிடப்பட்ட நேரம்: 08:28 (24/08/2018)

கடைசி தொடர்பு:08:28 (24/08/2018)

கேரளாவுக்கு உதவி செய்ய பாகிஸ்தான் தயார்! - இம்ரான் கான் அறிவிப்பு

வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

இம்ரான் கான்

பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இவரது, பதவியேற்பு விழாவில் இந்தியாவிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மட்டும் பங்கேற்றார். இந்நிலையில், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த கனமழையால் கடவுளின் தேசம் கண்ணீர் தேசமாகக் காட்சியளிக்கிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். ரூ.20,000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் இம்ரான் கான். இதுதொடர்பாக, அவரது ட்விட்டர் பக்கத்தில், `பாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்துகொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.