வெளியிடப்பட்ட நேரம்: 09:39 (24/08/2018)

கடைசி தொடர்பு:09:39 (24/08/2018)

”நிறைய செஞ்சிருக்கணும்..கொஞ்சம் உடம்பு சரியில்ல..!” கேரள மாணவி ஹனன் ஹமித்

கடவுள் தேசத்தின் மனிதநேய மனங்கள், தன்னலம் கருதாமல் இரவும் பகலுமாக உழைக்கும் உறவுகளின் பேரன்பு போன்றவை வெள்ளத்தைவிட அதிக சக்திகொண்டதாக மாறியுள்ளது. அப்படியான சக்திகளில் ஒருவர்தான், ஹனன் ஹமித்.

”நிறைய செஞ்சிருக்கணும்..கொஞ்சம் உடம்பு சரியில்ல..!” கேரள மாணவி ஹனன் ஹமித்

ப்போதும் பசுமைக்கும் அரசியலுக்கும் தலைநிமிர்ந்து காணப்படும் கேரளம், இன்று இயற்கையின் சீற்றத்தால் (அல்லது, நாம் பல்லாண்டுகளாக உருவாக்கிய நச்சுக்களை உள்வாங்க முடியாமல் தவிக்கும் இயற்கையின் செயல்) நிலைகுலைந்து நிற்கிறது. இந்த வெள்ளம் தந்த சேதம் அதிகம் என்றாலும், அந்தக் கடவுள் தேசத்தின் மனிதநேய மனங்கள், தன்னலம் கருதாமல் இரவும் பகலுமாக உழைக்கும் உறவுகளின் பேரன்பு போன்றவை வெள்ளத்தைவிட அதிக சக்தி கொண்டதாக மாறியுள்ளது. அப்படியான சக்திகளில் ஒருவர்தான், ஹனன் ஹமித் (Hanan Hamid) என்ற மாணவி.

ஹனன்

ஒரு மாதத்துக்கு முன்பு, பிரபல மலையாள நாளிதழ் ஒன்றில் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. கல்லூரியில் படித்துக்கொண்டே மாலையில் மீன் விற்று தன் செலவுகளையும் உடல்நலம் சரியில்லாத தன் அம்மாவின் மருத்துவ செலவுகளையும் பார்த்துக்கொள்கிறார் ஒரு மாணவி. அவருக்கு உதவ நினைப்பவர்கள், நிதி உதவி செய்யலாம் என்றது அந்தச் செய்தி. இது, சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் ஹனனை மிகவும் கேலி செய்தும் வைரல் ஆக்கினர் நெட்டிசன்கள். காரணம், அந்தக் செய்தியுடன் வந்த புகைப்படத்தில், ஹனனின் மேக்கப் மற்றும் தங்க மோதிரம்தான்.

ஹனன்இதற்கிடையில், ஹனனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிக்க முன்வந்தார் மலையாள இயக்குநர் அருண் கோபி. உடனே, 'ஹனன் பப்ளிசிட்டிக்காகவும் சினிமாவில் வாய்ப்பு பெறவுமே இதையெல்லாம் செய்கிறார்'  எனப் பலரும் ட்ரோல் செய்தனர். அதேநேரம், ஹனனுக்கு நிதியுதவி செய்த மனங்களும் இருந்தன. அந்த நேரத்தில் தன் நிலையைப் பற்றி விளக்கம் தந்த ஹனன், 'நான் எதையும் சுயவிளம்பரத்துக்காகச்  செய்யவில்லை. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், என்னுடைய ஏடிஎம் 'பின்' நம்பர் தருகிறேன். எனக்கு வந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்களின் யார் பணமும் எனக்குத் தேவையில்லை' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் ஹனனுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்னையை முடித்திருந்தார்.

தற்போது, கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1.5 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார் ஹனன் ஹமித். இதுகுறித்து அவரிடம் அலைபேசியில் பேசினோம்.

“அப்போது என்னைப் பற்றி செய்தி வெளியானதும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களில் பலரும் உதவி செய்தனர். தன்னிடமிருந்த ஒற்றை 100 ரூபாய் நோட்டையும் கொடுத்தவர்களை நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். என்னை ட்ரோல் செய்தவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் கேலிகள் என்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவே உதவியது. ஆக, எனக்கு உதவிசெய்த என் மக்கள் இன்று இயற்கை சீற்றத்தால் தவிக்கும்போது, எப்படி சும்மா இருக்கமுடியும்? அப்போது, எனக்கு ஒரு வாரத்திலேயே 1.5 லட்சம் நிதியுதவி கிடைத்தது. அந்தத் தொகையைத்தான் இப்போது வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தேன்.  எனக்குக் கொஞ்சம் உடம்பு சரியின்றி சிகிச்சை எடுத்துவருகிறேன். இல்லையெனில், என் உழைப்பின் மூலம் இன்னும் நிறைய உதவிகள் செய்திருப்பேன். நான் இரண்டு முகாம்களுக்குச் சென்றிருந்தேன். அதில் ஒன்று, எர்ணாகுளத்தில் உள்ளது. கோதாமங்களம் அரசுப் பள்ளியான அங்குள்ள மக்களைப் பார்த்து கலங்கிவிட்டேன். குடும்பம், வீடு, பொருள்கள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள். வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லை; எப்போது வேண்டுமானாலும் நமக்குச் சொந்தமானவற்றை இழக்கலாம் எனப் புரிந்துகொண்டேன். நான் செய்த சிறு உதவியை, என் மக்களுக்குத் திருப்பி கொடுத்த நன்றிக்கடன் என்றுதான் சொல்வேன்” என்கிற ஹனன் குரலில் நெகிழ்வும் தன்னடக்கமும்.

தற்போது, ‘அர குல்லன் முக்கல் குல்லன்’, 'மிட்டாய் தெருவு', 'வைரல் 2019' ஆகிய மலையாள திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துவருகிறார் ஹனன். பல மேடை நிகழ்ச்சிகளில் பாடல், மிமிக்ரி என அசத்திவருகிறார். இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது மனிதநேயத்தால் உயர்ந்துள்ளார் ஹனன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க