வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (24/08/2018)

கடைசி தொடர்பு:13:21 (24/08/2018)

ரக்‌ஷா பந்தன் தினத்தில் பெண்களுக்கு சிறப்பு ரயில்!

ரக்‌ஷா பந்தன் தினத்தை பெண்கள் சிறப்பாகக் கொண்டாட டெல்லியில் பெண்களுக்கான சிறப்பு ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது.

ரக்‌ஷா பந்தன்

ரக்‌ஷா பந்தன் வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரராக கருதும் ஆண்களின் கையில் வண்ணமயமான ராக்கி கயிறுகள் கட்டுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பு. ராக்கிகள் கட்டப்பட்ட ஆண் அந்தப் பெண்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது வழக்கம். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை மதங்களையும் தாண்டி நேசத்தைக் கொண்டிருப்பதால் பொதுவாக தற்போது அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில், டெல்லியில் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று பெண்களுக்கான சிறப்பு ரயிலை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே தரப்பில், `ரக்‌ஷா பந்தன் தினம் உடன்பிறப்புகளுக்கு இடையிலான அன்பின் கொண்டாட்டம். இந்தியன் ரயில்வே இந்த தினத்தை மிகவும் சிறப்பாக்க எண்ணியது. இந்த தினத்தில் பெண்கள் தங்களது சகோதரர்களிடம் எளிதாகவும், எந்தச் சிரமமும் இன்றி சென்று சேர்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் இந்த முடிவை, டெல்லியில் உள்ள  பெண்கள் வரவேற்றுள்ளனர்.