வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (24/08/2018)

கடைசி தொடர்பு:20:07 (24/08/2018)

தடைகளைக் கடந்து கேரளம் வந்த ராணுவ வீரர்! - 100 உயிர்களைக் காப்பாற்றிய அதிசயம்

கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹேமந்த் ராஜ் தனது விடுமுறையின் முதல் நாளில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி புரிந்து வருகிறார். மூன்று நாள்களில் நாளொன்றுக்கு 10 டன் உணவுப் பொருள்களை சேகரித்து தந்துள்ளார். சமூகவலைதளத்தில் இவரது செயல்பாடுகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

ராணுவ வீரர்

கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தான் கேரளாவுக்கு வந்ததையும் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டது குறித்தும் ஹேமந்த் ராஜ் பேசுகையில்  ``ராணுவத்தில் பணிபுரியும் எனக்கு விடுமுறை கிடைத்ததால் ஓணம் பண்டிகையைக் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருந்தேன். சொந்த ஊர் செல்வதால் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். டெல்லியிலிருந்து கொச்சி செல்வதற்கு விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தேன். டெல்லி வந்தடைந்த பின்னர்தான் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்த தகவல் எனக்குத் தெரியவந்தது. என்னுடைய கிராமம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. என் குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். கொச்சி விமானநிலையத்துக்கு செல்ல முடியாததால் எனது டிக்கெட் ரத்து செய்யப்பட்டிருந்த விவரத்தை எனக்குத் தெரிவித்தனர். இதையடுத்து இண்டிகோ விமான நிர்வாகத்தினரை அணுகி திருவனந்தபுரத்தில் இறக்கி விடுமாறு வேண்டுகோள் விடுத்தேன். எனது மக்களுக்கு நான் உதவ வேண்டும் என அவர்களிடம் தெரிவித்தேன். இண்டிகோ விமான நிர்வாகத்தினர் எனது ராணுவ உடைக்கு மரியாதை அளித்தனர். எனது கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரத்தில் இறக்கி விட்டனர். அதிகாலை 4 மணியளவில் திருவனந்தபுரத்தை வந்தடைந்தேன். அங்கிருந்து விமானப் படை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு செங்கனூரில் கொண்டு விடுமாறு கோரினேன். ஏனெனில் வெள்ளத்தால் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது. செல்போன்களும் வேலை செய்யவில்லை. செங்கனூரை அடைவதற்கு விமானப்படையை அனுகுவதைத் தவிர வேறு வழியில்லை.

மாநில அரசும் செங்கனூரில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து அறியாமல் இருந்தனர். செங்கனூர் பகுதியில் ஹெலிபேட் அமைந்திருந்த இடத்துக்கு அருகில் கல்லூரி இருந்தது. அங்கு நிவாரண முகாம் அமைக்கப்பட இருந்தது. என்னுடைய குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தேன். அப்பகுதியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு ஒரு குழுவை ஏற்படுத்தினோம். மொழிப் பிரச்னையால் தவித்துக்கொண்டிருந்த 13 மீட்புக்குழுவினர்களுடன் தொடர்புக்கொண்டோம். ஒவ்வொரு குழுவுக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவரை உதவிக்காக அனுப்பினோம். உள்ளூர் மீனவர்களும் உதவி செய்துகொண்டிருந்தனர். எங்கள் குழு பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டது. அங்கு உதவிக்காக காத்திருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்டனர்.  என்னுடைய குழுவில் 35 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாணவர்கள் இருந்தனர். உள்ளூர் மாணவர்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களைக் கொண்டு ஒரு தற்காலிக மையம் ஒன்றை உருவாக்கினர். இதன் மூலம் உதவிக்கேட்டு அழைப்பவர்களின் முகவரிகளைக் குறித்துக்கொண்டோம். நாங்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோம். 

நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்த எங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர்.  இதைக்கண்ட என் மனைவி  ‘நான் எங்கு இருக்கிறேன் என்ன செய்துகொண்டிருக்கிறேன்’ என்பதைதெரிந்துகொண்டார். என்னைத் தொடர்புகொண்டவர் குழந்தை, என் பெற்றோர்கள் அனைவரும் கோட்டயத்தில் உள்ள நிவாரண முகாம்களில் பத்திரமாக இருப்பதாகக் கூறினார். மின்சாரம் இல்லை தொலைபேசியை உபயோகிக்கமுடியவில்லை. அதிக திறன் கொண்ட மோட்டார் படகுகள் மூலம் மீட்புப்பணிகளில் ஈடுபட்டோம். தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளது. ஆனால், ஏராளமான மக்கள் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். நான் எனது விடுமுறையின் முதல் நாளில் இருந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். பாதிப்புகள் அதிகம்தான். ஆனால், இதில் இருந்து மீண்டு வருவோம் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.