வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (24/08/2018)

கடைசி தொடர்பு:16:06 (24/08/2018)

குழந்தைத் திருமண தேசத்தில், `பிரியங்கா-நிக்’ வயது வித்தியாசம் மட்டும் ட்ரோல் ஆக மாறுவது எப்படி?

ஏதோ ஒரு காரணத்துக்காகப் பெண்களை எள்ளி நகையாடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். இந்த வக்கிர மனநிலையின் வெளிப்பாடுதான், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது.

குழந்தைத் திருமண தேசத்தில், `பிரியங்கா-நிக்’ வயது வித்தியாசம் மட்டும் ட்ரோல் ஆக மாறுவது எப்படி?

`பிரியங்கா - நிக் ஜோனஸ் இருவரும் காதலிக்கின்றனர்!’

இப்படி ஒரு செய்தி வெளியானதும், சமூக வலைதள கலாசாரக் காப்பாளர்கள், இருவரின் ஜாதகங்களையும் அலசி, 10 பொருத்தங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரியங்காவைவிட நிக் ஜோனஸ் 11 வயது இளையவர் என்ற `அதிர்ச்சி தகவலை’ வெளியிட்டு, `அட கொடுமையே! தன் பிள்ளை வயதில் இருப்பவரையா பிரியங்கா திருமணம் செய்துகொள்வது?' என ஆதங்கப்பட்டனர். `பிரியங்கா ஒரு வெளிநாட்டுக்  குழந்தையைத் தத்தெடுத்திருக்கிறார்!' என மிகவும் இழிவாக `ட்ரோல்’ செய்ய ஆரம்பித்துள்ளனர். வெகு சிலரே, `அது இருவரின் தனிப்பட்ட விஷயம். அவர்களை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீர்கள். ரன்பீர் கபூரும் அலியா பட்டும்கூடத்தான் காதலிக்கின்றனர். ரன்பீருக்கும் 35 வயது. அலியாவுக்கு 25 வயது. அவர்களையும் கலாய்க்க வேண்டியதுதானே?' என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ட்ரோல்

சமூக வலைதளங்களில் பிரபலமாகியிருக்கும், `மீம்ஸ், ட்ரோல்’ கலாசாரம், பல சமயங்களில் தனிமனித தாக்குதல்களை நடத்துகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி சரியாக விளையாடாதபோது, அனுஷ்கா ஷர்மாதான் காரணம் என்று ட்ரோல் செய்தனர். சன்னி லியோன் பற்றி அவரின் கணவர் டேனியல் புகழ்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டால், `டர்டி ஃபேமிலி’ என்று இழிவுப்படுத்தினர். பிரவசத்துக்குப் பின்பு, ஐஸ்வர்யா ராய் உடல் எடை அதிகமானதுக்கு, `இனி இவர் பாலிவுட் பக்கம் வரவே முடியாது' என `நாட்டாமை’யாக மாறித் தீர்ப்பு சொன்னார்கள். பாலிவுட் நடிகை நேஹா துபியா தன்னைவிட இரண்டு வயது இளைவரை திருமணம் செய்ததால், `அவரை நீ கணவர் என்று அழைக்கக் கூடாது; தம்பி என்று அழைக்க வேண்டும்' என்று அறிவுரை மழை பொழிந்தனர். அலியா பட் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பொதுஅறிவு கேள்விக்குத் தவறாகப் பதில் சொன்னதுக்கு, `அவருக்கு மூளையே இல்லை' எனக் கேலி செய்து கொன்றனர். இப்படி ஒவ்வோரு முறையும், ஏதோ ஒரு காரணத்துக்காகப் பெண்களை எள்ளி நகையாடுவதை வழக்கமாகவே கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். இந்த வக்கிர மனநிலையின் வெளிப்பாடுதான், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் விஷயத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. 

ட்ரோல்

ஆனால், நாம் நிஜ வாழ்வில் என்ன செய்துகொண்டிருக்கிறோம். ஒரு சிறுமி பூப்பெய்தியதுமே, ``இவள் திருமணத்துக்குத் தயாராகிவிட்டாள். பெண் கேட்டு வருபவர்கள் வரலாம்’ எனத் தெரு முழுவதும் பேனர் கட்டி சடங்கு நடத்துகிறோம். அதே பெண், தன் மாதவிடாய் பற்றியோ, கடையில் நாப்கின் வேணும் என்று கேட்டலோ, விநோதமாகப் பார்க்கிறோம். `வீட்டுக்கு அடங்காதவள்’ என்று முத்திரை குத்துகிறோம். எவ்வளவு முரண் இது?!

ட்ரோல்

நம் சமுதாயம் காலங்காலமாக எத்தனை குழந்தைத் திருமணங்களைப் பார்த்திருக்கிறது. எத்தனை விதமான விழிப்புஉணர்வுகள் நடத்தினாலும், `குழந்தைத் திருமணத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர்’ என்ற செய்தியை எத்தனை முறைக் கடந்திருக்கிறோம். டிஜிட்டல் இந்தியா காலத்திலும் இந்த அவலத்தை அழிக்கமுடியவில்லை. 2011-ம் ஆண்டின் சர்வே, இந்தியாவில் 30% பெண்கள், 18 வயது அடைவதற்குள்ளே திருமணம் செய்துவைக்கப்படுவதாகச் சொல்கிறது. இந்தத் திருமணங்கள் பெரும்பாலும், 20, 30 வயது கடந்த ஆணுக்கும், 10, 15 வயதில் இருக்கும் சிறுமிக்கும் நடக்கிறது. ஏன் நாம் இந்த வயது வித்தியாசத்தை மீம்களாகவும் ட்ரோல்களாகவும் மாற்றிப் பொங்குவது இல்லை. இந்தச் சிறுமிகளைத் திருமணம் செய்யும் ஆண்களைக் கேலி செய்வதில்லையே ஏன்?

ட்ரோல்

ஏனென்றால், இவை எதுவும் `சுவாரஸ்ய’ போதைக்குத் தீனி போடாது. லைக்ஸ் மற்றும் ஷேர்களைக் குவிக்காது. `வைரல்' நோய்க்கு மருந்தாகாது. மீம்களுக்கும் ட்ரோல்களுக்கும் சுவாரஸ்யம் தேவை; சிந்தனை தேவையில்லை. கிசுகிசு தேவை; கண்ணியம் தேவையில்லை.

நகைச்சுவை என்பது ஒரு கலை. அதை நாம் பயன்படுத்தும் முறையில், ஒரு சமூகத்தின் அவலத்தை ஆணித்தரமாக உணர்த்த முடியும். செயல்படாத தலைவரின் அயோக்கியத்தனத்தைத் தோலுரித்துக் காண்பிக்க முடியும். நகைச்சுவை என்பது மற்றவர்களை வலி மறந்து சிரிக்கவைக்க வேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு வலியை ஏற்படுத்தி, அவர்களைச் சிரிக்கும் பொருளாக மாற்றுவது கிடையாது.

ட்ரோல்

தன்னைவிட ஒரு வயது பெரியவராக இருக்கும் பெண்ணைக் காதலிக்கும் ஓர் இளைஞனின் விண்ணைத் தாண்டிய கதையைப் படமாக எடுத்தால், `காதல் காவியம்' என்று கொண்டாடுகிறோம். அதேபோன்ற ஒரு செயலை, நிஜ வாழ்க்கையில் ஒரு நடிகை, தன் நடிப்புத் திறமையால் ஹாலிவுட் வரை சென்று சாதித்த ஒரு பெண் செய்தால் தவறா? தன் மனதுக்குப் பிடித்தவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டால், எத்தனை ட்ரோல்கள், எத்தனை மீம்கள்?

இந்த மோசமான மனநிலையை மாற்றாவிட்டால், நாமும் நம் சமூகமும், மற்ற உலகத்தவர்களுக்கு ஒருநாள் மீம்களாகவும் ட்ரோல்களாகவும் மாறுவோம்! 

மீம்

`காதலுக்குக் கண் இல்லை' என்ற வாக்கியத்தை நாம் கடவுள் வாழ்த்தாகவே வைத்திருக்கிறோம். அதேபோல, காதலுக்கு வயதும் இல்லை பாஸ். அவ்வளவுதான் விஷயம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்