”இடைக்கால நிவாரணமாக ரூ. 2,000 கோடி வேண்டும்” - பிரதமருக்குக் கர்நாடக முதல்வர் குமாரசாமி கடிதம்!

கர்நாடக மாநிலத்தில் மழை வெள்ளம் பாதித்தப்பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக இடைக்கால நிதி அளிக்க வேண்டும் எனக் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமருக்கு எழுதிய கடிதம்

கடந்த சில வாரங்களாகக் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்ததால், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை குடகு உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் வீடுகளை இழந்தனர். தற்போது மழை குறைந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. 

இந்நிலையில் கர்நாடகாவுக்கு உடனடியாக இடைக்கால நிவாரணம் அளிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் குமாரசாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், “மழைக் காலத்தில் தொலைப்பேசியில் அழைத்து நிவாரணம் தொடர்பாகவும் பாதிப்புகள் தொடர்பாகவும் தாங்கள் பேசியதற்கு நன்றி. குடகு மற்றும் கடற்கரை மாவட்டங்களில் கனமழை பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தியது. மழை காரணமாக மாநிலத்தில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,200 வீடுகள் சேதமடைந்துள்ளது. முதற்கட்டமாக நடத்திய ஆய்வில் மழையால் ஏற்பட்ட பொது சொத்து சேதம், பயிர் சேதம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றைச் சீர் செய்ய சுமார் 3,000 கோடி ரூபாய் ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குடகு பகுதிகளில் ஏற்கெனவே பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். அதனால் மாநிலத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிவாரணம் நிதியாக ரூபாய் 2,000 கோடியை விடுவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!