’நான் மீண்டும் முதல்வராவேன்’ -சலசலப்பை ஏற்படுத்திய சித்தராமையாவின் பேச்சு

மக்களின் ஆசியுடன் நான் மீண்டும் முதல்வராவேன் என கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா  தெரிவித்துள்ளது கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சித்தராமையா

கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஜனதா தள கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து குறைவான இடங்கள் பெற்றிருந்தாலும் ஜனதா தள கட்சியின் குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். 

இந்நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்தராமையா கூட்டம் ஒன்றில் பேசும்போது, “எனது ஆட்சிக்காலத்தில் மக்கள்நலன் சார்ந்து பணியாற்றினேன். ஆனால் மக்கள் தேர்தலில் என்னை ஆதரிக்கவில்லை. தற்போது அரசியலில் பணமும் சாதியும் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து. நான் மீண்டும் முதல்வராவேன் என்று தான் நினைத்தேன், மக்கள் அந்த வாய்ப்பைத் தருவார்கள் என நம்பினேன். தேர்தல் முடிவுக்குப் பின்னரும் நான் முதல்வராவேன் என்று தான் நம்பினேன். ஆனால் எதிரிகள் ஒன்று கூடி நான் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராவதைத் தடுத்து விட்டனர். ஆனால் மக்களின் ஆசியுடன் மீண்டும் முதல்வராவேன்” என்றார்.  காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் சித்தராமையாவின் இந்தப் பேச்சு கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!