வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (25/08/2018)

கடைசி தொடர்பு:07:45 (25/08/2018)

பல் சிகிச்சைக்கு 2.88 லட்சம் பில்... சர்ச்சையில் சிக்கிய ஆந்திர நிதியமைச்சர்

சாதாரண பல் சிகிச்சைக்கு லட்சங்களில் கணக்கு எழுதி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆந்திராவின் நிதியமைச்சர் யானமலா ராமகிருஷ்ணடு. இவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலிருக்கும் துனி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்மையில் ரூட் கேனல் எனப்படும் பல் வேர் சிகிச்சையை சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இவர் பெற்றிருக்கிறார். அந்தச் சிகிச்சைக்காக 2,88,823 ரூபாய் செலவானதாகவும் அதை அவரின் மருத்துவச் செலவாக ஏற்றுக்கொள்ள  வேண்டும் எனக் கேட்டு அதற்கான பில்லை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

நிதியமைச்சர்

அரசும் அதை ஏற்றுக்கொண்டு அதற்கான பணத்தை கொடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 23-ம் தேதி இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையும் தற்பொழுது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதில் ' மரியாதைக்குரிய நிதி மற்றும் திட்டமிடல், வணிக வரி சட்ட விவகாரங்கள் துறை அமைச்சர் யானமலா ராமகிருஷ்ணடு அவர்கள் கடந்த ஏப்ரல் 12, 2018 அன்று சிங்கப்பூர் மருத்துவமனையில் பெற்ற பல் சிகிச்சைக்கு ஆன மருத்துவச் செலவை கொடுப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியானதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ஆந்திராவில் இந்தச் சிறிய பல் சிகிச்சை அளிப்பதற்கான இடம் கூட இல்லையா ? என இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.