கத்தி முனையில் 100 பேரை மீட்ட நண்பர்கள் - கேரள மீட்புப்பணியில் ஒரு நெகிழ்ச்சி | People got threatened at knife point for rescue

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (25/08/2018)

கடைசி தொடர்பு:10:31 (25/08/2018)

கத்தி முனையில் 100 பேரை மீட்ட நண்பர்கள் - கேரள மீட்புப்பணியில் ஒரு நெகிழ்ச்சி

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களைக் கத்தி முனையில் மீட்டுள்ளனர் சில நண்பர்கள். இது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா

கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறிக்கும் கும்பலையே நாம் பெரும்பாலும் பார்த்திருப்போம். மிரட்டி உயிரைக் காப்பாற்றும் சில சம்பவங்கள் திரைப்படங்களில் தான் நடக்கும். ஆனால், கேரள வெள்ளம் இதை நிஜ வாழ்கையிலும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. 

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பல லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடு உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதில் சுமார் 350-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கேரள மீட்புப் பணியின்போது நடைபெற்ற சில சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் வரிசையில் தற்போது, வெள்ளத்தின்போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்த சிலரை கத்தியைக்காட்டி மிரட்டி நண்பர்கள் சிலர் மீட்டுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

கேரளா

PhotoCredits : Onmanorama

பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு மற்றும் அவரது நண்பர் கோபகுமாரன். கேரள மழையின்போது ரன்னி பகுதியில் உள்ள சில மக்கள் தங்கள் வீடு வெள்ளத்தில் மூழ்காது என்ற நம்பிக்கையுடன் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துள்ளனர். இரண்டு நாள்களுக்குப் பிறகு மழை அளவு தொடர்ந்து அதிகரித்ததால் ரன்னி பகுதியில் வெள்ளமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. வீட்டில் இருந்தவர்களை மீட்புப்படையினர் எவ்வளவோ வற்புறுத்தியும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மனமில்லாமல் உள்ளேயே இருந்துள்ளனர். இதை அறிந்த பாபு மற்றும் கோபகுமாரன் ஆகிய இருவரும் தங்களுக்குச் சொந்தமான ஃபைபர் படகு மூலம் வீட்டில் உள்ளவர்களைக் கத்தி போன்ற ஆயுதங்கள் மூலம் மிரட்டிப் பணிய வைத்து வீட்டை விட்டு வெறியேற்றச் செய்து முகாம்களில் சேர்த்துள்ளனர். 

இது குறித்து பேசிய பாபு, வெள்ளத்தின் மூலம் என் உறவினர் ஒருவரை நான் பறிகொடுத்துவிட்டேன். இதேபோன்ற நிலை மற்றவர்களுக்கும் ஏற்படக்கூடாது என நான் கருதினேன் அதனால் தான் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவர்களைக் கத்தியை வைத்து மிரட்டினோம். நான் மிரட்டியதால் பலர் என் மீது கோபத்தில் இருந்தனர். ஆனால், அவர்களைக் காப்பாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சுமார் 100 பேரை நானும் என் நண்பனும் சேர்ந்து மீட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.