`மோடியின் ட்விட்டரில் இருக்கிறது பதில்'! - ரூ.700 கோடி விவகாரத்தில் மனம்திறந்த பினராயி விஜயன்  | Pinarayi Vijayan said there was no confusion about UAE aid

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (25/08/2018)

கடைசி தொடர்பு:13:49 (25/08/2018)

`மோடியின் ட்விட்டரில் இருக்கிறது பதில்'! - ரூ.700 கோடி விவகாரத்தில் மனம்திறந்த பினராயி விஜயன் 

வெள்ள பாதிப்பில் இருந்து கேரள மக்களை மீட்டெடுக்க அண்டை மாநிலங்கள், உலக நாடுகள் என உதவ முன்வந்துள்ளன. அதே வேளையில், அமீரகம் ரூ.700 கோடி நிவாரண நிதியாக அறிவித்துள்ளது என்று வெளியான செய்தி தற்போது வரையில் சர்ச்சையாகவே உள்ளது. 

கேரள வெள்ளம்

முன்னதாக, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி அறிவித்தார். இதனிடையில், மீண்டும் மழை தீவிரமடைந்தது. இந்த நிலையில், அமீரகம், கத்தார் போன்ற நாடுகள் உதவ முன்வந்தன. மத்திய அரசு சார்பில் முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.500 கோடியை பிரதமர் அறிவித்தார். இதுவரையில், ரூ.600 கோடி நிவாரண நிதியாக கேரளாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதே நேரத்தில், கேரளாவுக்கு அமீரகம் ரூ.700 நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மத்திய அரசின்மீதான விவாதப் பார்வையை திருப்பியது. குறைவான நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளதாகச் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, அமீரகத்தின் நிதியுதவியை மத்திய அரசு நிராகரித்ததாகத் தகவல்கள் பரவின. இருப்பினும், இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காமல் மத்திய அரசு தற்போது வரையிலும் மவுனமாக இருந்து வருகிறது. 

இந்த விவகாரத்தில் உச்சகட்ட திருப்புமுனையாக, `கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியுதவி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் எந்த முடிவும் இதுவரையிலும் எடுக்கவில்லை' என்று அந்நாட்டுத் தூதரக அதிகாரி அகமது அல்பன்னா அண்மையில் தெரிவித்தார். இதனால், எதிர்க்கட்சியின் விமர்சனத்துக்கு உள்ளானார் பினராயி விஜயன். 

பினராயி விஜயன் 

இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த பினராயி விஜயன், `பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவிலேயே அமீரகம் நிதியுதவி வழங்க முன்வந்ததற்கான பதில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் நிதியுதவி வழங்க முன்வந்ததைப் பிரதமர் மோடி மற்றும் ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தான் அல் நஹயான் கூறியுள்ளனர். இந்தத் தகவலை, தன்னிடம் தொழிலதிபர் யூசப் அலிதான் தெரிவித்தார். அவரிடம், நான் அப்போதே கேட்டேன், மக்கள் மத்தியில் இதனை தெரிவிக்கலாமா என்று. அவரும் தெரிவித்துவிடுங்கள் என்றார். மேலும், பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவைப் படித்தாலே தெரியும் உண்மை என்னவென்று' என தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 18-ம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், `இந்தக் கடினமான நேரத்திலும் கேரள மக்களுக்காக ஆதரவளிக்க முன்வந்துள்ள ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தானுக்கு மிக்க நன்றி. கேரளா குறித்து உங்களுடைய கவலை, இந்தியா மற்றும் யு.ஏ.இ அரசாங்கம் மற்றும் இரு நாட்டு மக்களிடையில் சிறப்பான ஒரு உறவைப் பிரதிபலிக்கிறது' எனப் பதிவிட்டுள்ளார்.