வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (25/08/2018)

கடைசி தொடர்பு:13:30 (25/08/2018)

`குழப்பம் விளைவிக்கக் கூடாது'- சித்தராமையாவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சித்தராமையா. ``இதுவே எனக்குக் கடைசி தேர்தல். மீண்டும் எனக்கு வாக்கு அளித்து முதல்வர் ஆக்கினால் மக்களுக்கான பல நல்லத் திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுவேன்'' என்று கூறியிருந்தார். ஆனால், தேர்தல் முடிவு வேறுமாதிரியாக அமைந்துவிடவே சித்தராமையாவின் முதல்வர் கனவு தகர்ந்துவிட்டது. 

சித்தராமையா கூட்டத்தில்

இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி தேவகவுடா சொந்த ஊரான ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசும்போது, ``அரசியல் என்பது ஓடும் தண்ணீர். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனது அரசியல் போராட்டம் தொடரும். கடந்த முறை ஆட்சியில் மக்களுக்கான பல நல்லத் திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினேன். குறிப்பாக எஸ்.சி, எஸ்.டி சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு அறிவித்தேன். ஆனால், தேர்தலில் என்னைத் தோல்வி அடைய வைத்துவிட்டனர். 

இப்போது என்னுடைய அரசியல் எதிரிகள் எல்லாம் ஒன்று கூடிவிட்டனர். அவர்கள் என் அரசியல் இதோடு முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் நினைப்பதுபோல நடக்காது. நான் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று சித்தராமையா பேசிய பேச்சு கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரும் ஆதரவு குரல் தெரிவித்து இருப்பதுதான் ஆச்சர்யம். குறிப்பாக சித்தராமையாவின் கருத்துக்கு சிக்கபெல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுதாகர் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இதேபோல சித்தராமையாவின் பேச்சுக்கு மூத்த தலைவர்களான துணை முதல்வர் பரமேஸ்வர், டிகே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ``கூட்டணி ஆட்சியில் யாரும் குழப்பம் விளைவிக்கக் கூடாது'' என்று தெரிவித்துள்ளனர்.