வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (25/08/2018)

கடைசி தொடர்பு:13:22 (25/08/2018)

``பேரிடரின்போது மொபைலை சரியா பயன்படுத்த மக்களுக்குத் தெரியலை!"- ராணுவ வீரரின் ரிப்போர்ட்

``பேரிடர் காலங்களில் மனிதர்கள் மனிதத்துடனே இருக்கிறார்கள்" - தலைமை ராணுவ வீரரின் கள ரிப்போர்ட்!

``பேரிடரின்போது மொபைலை சரியா பயன்படுத்த மக்களுக்குத் தெரியலை!

கேரள வெள்ளத்தின்போது பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தலைமை ராணுவ வீரரின் பதிவு இது... 

உடனடி ஆபத்து இருந்தபோதும், மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். அந்த அளவுக்கு தங்கள் உடைமைகளுடன் பிணைக்கப்பட்டு இருந்தார்கள். விலங்குகள் கூட உயிர் பிழைக்க பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிட்டன. விலங்குகள் சென்றாலும் அந்த மனிதர்களால் அந்தக் கட்டடங்களையும் உடைமைகளையும் விட்டு விலகிச் செல்ல முடியவில்லை... முடியாது என்பதுதான் உண்மை. 

பேரிடர் வீடு இடிதல்

பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தங்கள் வருவாயில் 80 சதவிகித பணத்தை வீடாகவும் நிலமாகவும் முதலீடு செய்திருக்கின்றனர். கடைசிக் காலத்தில் தங்களுடைய ஓய்வூதியத்தை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது அந்த வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. இன்னும் ஒருமுறை பிரமாண்டமான வீட்டைக் கட்டியெழுப்பும் திறனும், அதற்காக எந்தப் பணமும் அவர்களிடம் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர மக்களாக இருப்பதால் அரசு அவர்களுக்கு உதவி செய்யும் உத்தரவாதமும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஆடம்பர பொருள்கள், மின்னணு பொருள்கள், கார் மற்றும் ஓவியங்கள் ஆகியவற்றின் மீது நிறைய பணத்தை செலவழித்துள்ளனர். 

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை நீர் வழிப்பாதைகளுக்கு அருகில் அமைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்கு நீந்தவோ அல்லது சரியாகப் படகு ஓட்டவோ தெரியவில்லை. பேரழிவுக் காலத்தில் உயிர் பிழைப்பதற்கான அடிப்படை விஷயம்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தொழில்நுட்பத்தை நேசிக்கும் அதே வேளையில் தொழில்நுட்பத்தை அவசரக் காலத்தில் பயன்படுத்த அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உதாரணமாக - மின்னணு சாதன பேட்டரிகளின் ஆயுள் நீட்டிப்பது மற்றும் சேமிப்பது பற்றிய அடிப்படை அறிவு இல்லாதிருப்பது. மின்னணு சாதனங்களின் மூலமாக இருப்பிடங்களைக் கண்டுபிடிப்பது மற்றும் இருப்பிடப் பகிர்வு ஆகியவற்றைப் பற்றியும் பலருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இருப்பிடங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்திருந்தால் மீட்புக்குழு துல்லியமான இடங்களுக்குச் சென்று உடனடியாக காப்பாற்றி இருப்பார்கள். 

பேரிடர் கேரளா

பேரிடர் காலங்களில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: பல வீடுகளில் அரை டஜன் மொபைல்களுக்கும் மேல் இருந்தன, ஆனால், குடும்ப உறுப்பினர்களால் அனைத்துமே ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டன. அதன் காரணமாக அனைத்து மொபைல்களின் பேட்டரிகளும் தீர்ந்து போய்விட்டன. மின்சாரம் இல்லாதபோதும் ஒரே நேரத்தில் அனைத்து மொபைல்களைப் பயன்படுத்துவது தவறு என்பதை அவர்கள் அறிந்திருந்தும், அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் அவர்களைத் தொடர்புகொண்டு மீட்க அதிக நேரம் எடுத்து மெனக்கெட வேண்டியிருந்தது. சிலருக்கு உடல் அமைப்பு பலவீனமாக இருந்தது. ஆம், மார்பளவு தண்ணீரில் சிலரால் நடக்க முடியவில்லை. 44 ஆறுகள் பாயும் ஒரு நாட்டில் பிறந்த மனிதர்கள் தண்ணீருக்குள் நடக்க இவ்வளவு சிரமப்படுகிறார்கள். 

நல்ல நடத்தையும், அதனால் ஏற்பட்ட நல்ல விஷயங்களும்! 

மக்கள் ஜாதி, மதம், அரசியல், பணக்காரர், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல் விரைவாக ஒன்று சேர்ந்தார்கள். மீட்புப் பணிகள், தேவைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உடனடியாக ஆதரவு கொடுத்தனர். மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்ட யாருக்கும் முறையான முன் அனுபவம் கிடையாது. இருந்தாலும், அதிகாரிகளுக்காகவும், அரசின் உதவிக்காகவும் யாரும் காத்திருக்கவில்லை. எனவே, பேரிடர் பல தலைவர்களை உருவாக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். 

இளைய தலைமுறையினர் சுயநலமாக இருக்கிறார்கள் என்று பொதுவாக அனைவருமே குற்றம்சாட்டி வருகிறோம். கேரள வெள்ளத்தில் சோர்வடையாமல் உழைத்தவர்கள் இளைஞர்கள்தான். அவர்களால்தான் நாட்டுக்கு நாளை ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. நிவாரண முகாம்களுக்கு மக்கள் எந்தவிதமான தயக்கங்களும் இல்லாமல் பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்தனர். பலர் கூட்டாகவும் தனியாகவும் ஒவ்வொருவரின் பசியைப் போக்குவதில் அதிக அக்கறை காட்டினர். எந்த ஒரு கடையிலும், சூழ்நிலைகளைக் காரணம் காட்டி விலை ஏற்றவில்லை. சில கடைகளில் இலவசமாகக் கூட பொருள்கள் தரப்பட்டன. 

பேரிடர் மீட்பு

இந்த வெள்ளத்தில் மனிதர்கள் மனிதர்களாகவே இருந்தனர். நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதில் ஆரம்பத்தில் குழப்பம் நிகழ்ந்தாலும் மாநில நிர்வாகம் விரைவாக ஒருங்கிணைத்தது. பெரும்பாலானோர் ஓணம் கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தினர். இதையெல்லாம் விடப் பெரிய பாடம் - `பேரிடர்களின்போது மனிதர்கள் நல்ல மனதுடன் நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். இதுவும் ஆரோக்கியத்தின் வெளிப்பாடுதான்...'


டிரெண்டிங் @ விகடன்