மாநில அமைச்சரைத் திட்டிய விவகாரம் - நிர்மலா சீதாராமனுக்குக் கர்நாடக துணை முதல்வர் கண்டனம்!

என்னுடைய  சக அமைச்சரை நீங்கள் கடுமையாகச் சாடியது வேதனையாகவுள்ளது என்று கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாகச் சாடியுள்ளார். 

கர்நாடாக மாநிலம் குடகு வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று குடகு மாவட்டத்துக்குச் சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, 'நான், எனக்காக வரையறுக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி செயல்படுகிறேன். உங்களுக்கு, அதிகாரிகள் முக்கியமாக இருக்கலாம். என்னுடைய பரிவார்(குடும்பம்) எனக்கு முக்கியம். மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்களைப் சொல்வதைப் பின்பற்றவேண்டியுள்ளது. இது ஏற்கக்கூடியதல்ல' என்று ஊடகத்தின் முன்பு கர்நாடக மாநில முதல்வர் சா.ரா.மகேஷை கடுமையாகச் சாடினார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் ஒருவர் பொதுத்தளத்தில் மாநில அமைச்சரை சாடியது விவாதத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா, 'மீட்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக எங்களுடைய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இணைந்து ஒரு வாரமாக குடகில் தங்கியுள்ளனர். நீங்கள், அவர்களுக்கு சரியான மரியாதை அளிக்க வேண்டும். அப்போது, அவர்கள் உங்களுக்குச் சரியான மரியாதை அளிப்பார்கள். என்னுடைய சக அமைச்சரை நீங்கள் திட்டியது வருத்தத்தை அளிக்கிறது. மாநில அரசுகள், தங்களுக்கான அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து பெறுகின்றன. மத்திய அரசிடமிருந்து பெறவில்லை. அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் அதிகாரத்தை உரிய அளவில் பங்கிட்டுக் கொடுத்து சமமான உரிமையை உறுதிப்படுத்துகிறது. நாங்கள் மத்திய அரசுக்கு குறைந்தவர்கள் கிடையாது. மத்திய அரசுக்கு சமமானவர்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!