வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (25/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (25/08/2018)

சன்னிலியோன், புறா, மான், யானை படங்களுடன் வாக்காளர் அடையாள அட்டை - உ.பி சர்ச்சை

உத்தரப்பிரதேச வாக்காளர் பட்டியலில் சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

சன்னி லியோன்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் வகையில், பால்யா மாவட்டத்தில் 2 பக்கங்கள் கொண்ட வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இது தற்போது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில், பாலிவுட் திரைப்பட நடிகையான சன்னி லியோன் பெயர் இடம்பெற்றுள்ளதுதான். அதோடு, புறா, மான், யானை உள்ளிட்ட விலங்குகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதே சர்ச்சைக்குக் காரணம். 

உத்தரபிரதேச வாக்காளர் பட்டியல்

அதில், துர்க்கா தேவி என்ற பெண்ணின் பெயர் விவரத்துடன் சன்னிலியோன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதேபோல், குமார் அன்குர் சிங் என்ற வாக்காளரின் விவரங்களுடன் மான் புகைப்படம் இடம்பெற்றுள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள வாக்காளர் பட்டியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. முன்னதாக, அம்மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்வது தொடர்பாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்தே, இரண்டு பக்கங்கள் கொண்ட வாக்காளர் பட்டியல் கசிந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `இங்குள்ள ஆப்ரேட்டர் ஒருவரால் இந்தத் தவறு நடந்துள்ளது. சமீபத்தில்தான் அவர், நகர்ப்புற பகுதியிலிருந்து கிராமப்புறத்துக்கு மாற்றப்பட்டார். பணியிட மாற்றத்தால் அதிருப்தியில் இருந்த அவர், இவ்வாறு செய்துள்ளார். சம்பந்தப்பட்டவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர்.