வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (25/08/2018)

ரஃபேல் போர் விமான விவகாரம்..! ப.சிதம்பரம் அடுக்கும் கேள்விகள்

பிரான்ஸிடமிருந்து வாங்கிய ரபேல் போர் விமானங்களின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது ஏன் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கொல்கத்தாவிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், 'ரபேல் போர் விமான விவகாரம் உச்சகட்டத்தில் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். இதுதொடர்பாக, பொதுத் தளத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். மேலும், முழுமையான விசாரணையும் நடத்த வேண்டும். அப்படி, நடத்தினால்தான் ராகுல்காந்தியும், காங்கிரஸும் இந்தப் பிரச்னையை ஏன் எழுப்பியது என்று தெரியவரும். 126 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு இந்திய அரசு முடிவு செய்திருந்தது.

அதில், 18 விமானங்களை பிரான்ஸிடமிருந்து வாங்குவதென்றும் மீதி 108 விமானங்களை, பிரான்ஸ் நிறுவன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெங்களூருலேயே தயாரிப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டிருந்தது. ஒரு விமானம் 526 கோடி ரூபாய் என்ற வீதத்தில் 36 போர் விமானங்கள் 18,940 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றப் பின்னர், 2015-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற மோடி, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால், விமானத்தின் விலை மதிப்பு அப்போது வெளியிடப்படவில்லை.

பின்னால் வெளிவந்த ஆவணங்களின்படி, 7.5 பில்லியன் யூரோஸ்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது தெரியவந்தது. அது இந்திய மதிப்புக்கு 60,145 கோடி ரூபாய். இந்த விலையின் அடிப்படையில் ஒரு போர் விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் ஆகும். இந்த எண்ணிக்கையெல்லாம் சரி என்றால், ஒரு போர் விமானத்துக்கு மூன்று மடங்கு அதிகம் விலை அதிகரித்ததற்கு காரணம் என்ன? இந்த ஒப்பந்தம் ரகசியானது. விமான ஒப்பந்த விலையை வெளியிட முடியாது என்று மத்திய தெரிவித்திருந்தது. நான் தற்போது போர் விமானங்களின் விலையை வெளியிட்டுவிட்டேன். இதில் என்ன ரகசியம் உள்ளது.

பாதுகாப்புத்துறை ஆயுதங்கள் வாங்குவதற்கென்று சில வழிமுறைகள் உள்ளது. ஆனால், மாற்று வழியில் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்போது விலையை குறைப்பதற்கான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்கள் வாங்குவதை, அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் எந்தக் குழு ஈடுபடவில்லை. எந்த அமைச்சர்களுக்கு இதைப் பற்றி தெரியாது. பாதுகாப்புத்துறை, நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கும் இதைப் பற்றி தெரியாது' என்று தெரிவித்தார்.