மழை வெள்ளத்தில் மூழ்கியபோது கேரளத்தில் இந்த சம்பவங்களும் நடந்தன!

மழை வெள்ளத்தில் வீடு முழுவதும் மூழ்கியபோது வெளியேற மனம் இல்லாமல் இருந்தவர்கள், மீட்புப்பணிக்கு ஒத்துழைக்காத மனிதர்கள் எனப் பல சம்பவங்கள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களே மீட்புப்பணிகளுக்கு ஒத்துழைக்காமல் இருந்த நிகழ்வுகள் பரபரப்பாக பேசப்படுகின்றன.

மழை வெள்ளத்தில் மூழ்கியபோது கேரளத்தில் இந்த சம்பவங்களும் நடந்தன!

கேரள மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டு வருவதில் ராணுவமும், மீனவர்களும், தன்னார்வலர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா எனப் பக்கத்து மாநிலங்கள் அனைத்தும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு போலக் களமிறங்கி செயல்பட்டனர். நாடு முழுவதும் கேரள வெள்ளம் தொடர்பான செய்திகள் தலைப்புச் செய்தியானது. ஒட்டுமொத்த தேச மக்களும், வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் கரம்கோத்து செயல்பட்டதில் மீளத்துவங்கியுள்ளது கேரளா.

இந்த மீட்புப்பணிகளில் கேரள எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரி தூத்தூர் பகுதி மீனவர்களும் ஈடுபட்டிருந்தனர். நீரால் சூழப்பட்ட ஆலப்புழா மாவட்டத்தில் படகு வீடுகள் அதிகம் உண்டு. மீட்புப்பணிகளுக்குப் இங்குள்ள எக்கச்சக்க படகுகளை அனுப்பக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அலங்கார படகுகள் சேதம் அடைந்துவிடும் என்பதால் அதன் உரிமையாளர்கள் மீட்புப்பணிகளுக்குப் படகுகளை அனுப்ப முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களுடைய படகு வீடுகளுக்கான லைசென்ஸ் ரத்து செய்து கேரள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். 

கேரள மழை

இதுபோன்று வெள்ளம் சூழ்ந்த தங்கள் வீட்டில் இருக்கும் பொருள்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வீட்டைவிட்டு வெளியேறாமல் இருந்தவர்களும் உண்டு. 'உணவும், தண்ணீரும் கொண்டு வாருங்கள். நாங்கள் இங்கேயே இருக்கிறோம்' என்று கூறிவிட்டு மீட்புப்பணிக்குச்சென்ற படகுகள், ஹெலிகாப்டர்களைத் திருப்பி அனுப்பிய சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக நடந்துள்ளன. எர்ணாகுளம் பகுதியில் தன்னார்வலர்கள் மீட்புப்பணிக்குச் சென்றபோது இரண்டு மாடி வீட்டிற்குள் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இருந்திருக்கிறார். 'உங்களை மீட்டு அழைத்துச்செல்ல வந்திருக்கிறோம், வீட்டில் நாற்காலி இருந்தால் கொடுங்கள். அதில் உங்களை உட்காரவைத்துத் தூக்கிச்செல்கிறோம்' என்று தன்னார்வலர்கள் அந்த மூதாட்டியிடம் கூறியிருக்கிறார்கள். அதற்கு அவரோ, 'முதலில் என் வீட்டில் இருக்கும் டி.வி.யை மேல் மாடியில் உயரமான இடத்தில் கொண்டுபோய் வையுங்கள். பிறகு நாற்காலி தருகிறேன்' எனக் கூறி மூதாட்டி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். வெள்ளம் அதிகப்படியாகச் சூழ்ந்திருந்தபோது அவசர அவசரமாக ஒரு வீட்டுக்குள் சென்று 'வெளியே வாருங்கள்' என மீட்புப்படையினர் கூறினார்களாம். அப்போது 'வீட்டில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறோம், ஒரு மணிநேரத்திற்குப் பிறகு வந்து எங்களை அழைத்துச்செல்லுங்கள்' என அதிர்ச்சியளித்திருக்கிறார்கள் அவர்கள்.

கேரள மழை

செங்கனூர் எரமில்லகர பகுதியில் 'ஸ்ரீ அய்யப்பா நர்சிங் கல்லூரி' மாணவிகள் 15 பேர் ஹாஸ்டலில் சிக்கிக்கொண்டனர். அவர்களை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். ஹெலிகாப்டர் வந்து மீட்டுச் செல்வதால், மழை வெள்ளத்தால் பலம் இழந்து நிற்கும் வீடுகள் உடைந்துவிழுந்துவிடும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் மாணவிகளைத் தாக்கியுள்ளனர். இதுபற்றி மாணவிகள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

கேரள மழை

வீட்டு மாடியில் நின்றுகொண்டு ஓர் இளைஞன் சட்டையைக் கழற்றி ஹெலிகாப்டரை நோக்கிக் காட்டியிருக்கிறார். அவர் ஆபத்தில் இருக்கிறார் என நினைத்து மீட்பதற்காக வீட்டிற்கு மேல் பறந்தபடி ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர் கயிறு மூலம் இறங்கியிருக்கிறார். ராணுவவீரரும், ஹெலிகாப்டரும் தெரியும்படி செல்பி எடுத்துக்கொண்ட அந்த இளைஞன் மொபைலை பாக்கெட்டில் வைத்துவிட்டு 'கை' அசைத்துத் திரும்பி சென்றுவிடுங்கள் என்று ராணுவவீரர்களிடம் கூறியிருக்கிறான். இதுபற்றி வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார் அந்த ராணுவ வீரர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!