``கேரளாவுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியிடவில்லை'' - அமீரக தூதர் விளக்கம்!

கேரளாவுக்கு ரூ. 700 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கவில்லை என்று அமீரகம் மறுத்துள்ளது. 

கேரளா வெள்ளம்

மழை வெள்ளத்தால் சிதறுண்டு போன கேரள மாநிலத்துக்கு அமீரகம் ரூ. 700 கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார். பேரிடர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால், அமீரகம் அளித்த நிதியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால், அமீரகம் நிதியுதவி அளிப்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று அந்நாட்டுக்கான இந்திய தூதர் அகமது அல்பானா மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ''அமீரக துணை பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் கேரள மாநிலத்துக்கு உதவுவதற்காக தனி குழுவை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், நிதியுதவி அளிப்பது தொடர்பாக அமீரக அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை '' என்று கூறியுள்ளார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன், இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ''அமீரகத்தைச் சேர்ந்த கேரள தொழிலதிபரும் லூலூ குழுமத் தலைவருமான யூசப் அலி அமீரகம் நிதியுதவி அளிப்பது குறித்த  தகவலை தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். 'அமீரக உதவி குறித்து வெளிப்படையாக அறிவிக்கலாமே என்று அவரிடம் கேட்டதாகவும், அதில் பிரச்னை ஒன்றும் இல்லை என்றும் தன்னிடம் யூசப் அலி பதில் அளித்ததாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் ''அமீரகம் அளிக்கும் நிதியுதவியை பெறுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும். அமீரகத்தின் உதவியை ஏற்றுக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன் '' என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!