``உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது'' - குற்றம்சாட்டும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்!

உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடுப்பதற்கு முன்பாக  அங்கு மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதை எண்ணிப்பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரசாந்த் பூஷன்

ராபேல் போர்விமானங்கள் வாங்கியதில், பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேசி வரும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருக்கும் போது, ரபேல் போர் விமானம் ஒன்றை 526கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் தற்போதைய பா.ஜ.க அரசு ரபேல் போர் விமானத்தை 1,670 கோடிக்கு வாங்கியுள்ளது என குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. அதே போல, ரபேல் போர் விமானத்தின் விலையை மூன்று மடங்கு உயர்த்தியது குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், `ரபேல் போர் விமானம் வாங்கியதில் ரூ.36 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து நான் தீர்மானிக்கவில்லை. ஏனெனில், உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கையும் தொடுப்பதற்கு முன்பாக அங்கு மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருவதை எண்ணிப்பார்க்க வேண்டும். ரபேல் விவகாரத்தில் அனைத்து தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை தேர்வு செய்துவிட்டேன்' என்று அவர் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை மிகவும் வீரியத்துடன் மக்களிடம் எடுத்து செல்வது பாராட்டுக்குறியது என்றும் பிரசாந்த் பூஷன் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!