"23 லட்சம் மின் இணைப்புகள், 1 லட்சம் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன" - கேரள முதல்வர் தகவல்! | pinarayi vijayan tweet about kerala flood relief

வெளியிடப்பட்ட நேரம்: 06:40 (26/08/2018)

கடைசி தொடர்பு:06:40 (26/08/2018)

"23 லட்சம் மின் இணைப்புகள், 1 லட்சம் வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன" - கேரள முதல்வர் தகவல்!

வரலாறு காணாத கனமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கேரள மாநிலம் படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கியிருந்த மக்கள், மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள்.

மீட்புப்பணிகள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைக்க ரூபாய் ஒரு லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அதற்கான வட்டித் தொகையை அரசே செலுத்தவும் முடிவு செய்துள்ளது. தற்பொழுது மின்சாரம், குடிநீர் போன்றவை மக்களுக்கு உடனடி தேவையாக இருக்கின்றன. மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அரசுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் களத்தில் இறங்கிப் பணியாற்றி வருகிறார்கள். பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதில் கைகோர்த்திருக்கிறார்கள்.

கேரள முதல்வர்

இந்நிலையில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கிறார். அதில் '1,31,683 வீடுகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பாதிப்படைந்த 25.6 லட்சம் மின் இணைப்புகளில் 23.36 லட்சம் இணைப்புகள் சரி செய்யப்பட்டு விட்டன. பாதிப்படைந்த 16,158 மின்மாற்றிகளில் 14,314 சரி செய்யப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது' என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.