இந்தியாவுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு!

இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பீகார் மாநிலம் முசாபர்பூரில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி. அவர் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள நீதிமன்றத்தில் அவர் மீது சுதிர்குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், `ஜெர்மனி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் பெருகியதற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததுதான் காரணம் என்று கூறி இருக்கிறார்.

இதுபோன்று இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில்  கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். இது இந்தியாவுக்கு அவமானம் ஆகும். எனவே ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!