தந்தை அளித்த தீர்ப்பை மாற்றிய மகன்: இந்திய நீதித்துறையில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

தந்தை அளித்த தீர்ப்பை மாற்றிய மகன்: இந்திய நீதித்துறையில் நிகழ்ந்த சுவாரஸ்யம்

”நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது” – 'பராசக்தி' திரைப்படத்தில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி எழுதிய வசனம் இது. நீதிமன்றங்கள் விசித்திரமான வழக்குகளை மட்டுமல்ல, விசித்திரமான மனிதர்களையும் சூழல்களையும் கூடச் சந்தித்திருக்கிறது. அவ்வாறு இந்திய நீதித்துறையில் தந்தை நீதிபதியாக வழங்கிய தீர்ப்பை மகன் நீதிபதியாக வந்து ரத்து செய்த ஒரு சம்பவத்தைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை

அதற்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இரண்டு வழக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். நெருக்கடி நிலை காலத்தில் 1976-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட ஏடீஎம் ஜபல்பூர் (ஹேபியஸ் கார்பஸ்) வழக்கு, கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட அரசியலமைப்பு அமர்வின் தனியுரிமை (Privacy) தொடர்பான வழக்கு.

வரலாற்றின் வெவ்வேறு கால கட்டங்களில் நடைபெற்ற இந்த இரண்டு வழக்குகளுக்கும் சட்டப்பூர்வமாக மட்டுமல்ல, மற்றொரு விதத்திலும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதற்கு முன்னதாக இந்த வழக்குகளைப் பற்றியும் சற்று மேலோட்டமாகத் தெரிந்து கொள்வோம்.

ஹேபியஸ் கார்பஸ் வழக்கு:

நெருக்கடி நிலை காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ’ஆட்கொணர்வு’ மனு தொடர்வது உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளை ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்துப் பல உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட ஒன்பது மாநில உயர்நீதிமன்றங்கள் 'ஆட்கொணர்வு மனு' கோருகிற உரிமை மக்களுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் 4 - 1 என்கிற கணக்கில் அனைத்து உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் ரத்து செய்யப்பட்டு ஆட்கொணர்வு மனு கோருகிற உரிமை கிடையாது எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததால் பிற்காலத்தில் தலைமை நீதிபதி பதவியை இழந்தவர் நீதிபதி ஹெச்.ஆர். கண்ணா.

தனியுரிமை வழக்கு:

'ஆதார்' தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஐந்து நீதிபதிகள் அமர்வு, ' தனியுரிமை (Privacy) என்பது அடிப்படை உரிமை தானா?' என்பதைத் தீர்மானிக்க ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்றை அமைத்தது. இந்த அமர்வு 24.08.2017 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் 9 – 0 என்கிற கணக்கில் ஒரு மனதாக ‘தனியுரிமை என்பது அடிப்படை உரிமை தான்’ என்றும், மேலும் இதுதொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட இரண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் ரத்து செய்தது. அதில் 'ஹேபியஸ் கார்பஸ்' வழக்கும் ஒன்று.

இங்கே 'தனியுரிமை' வழக்கில் முதன்மைத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் தந்தை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட். அவர்தான் 'ஹேபியஸ் கார்பஸ்' வழக்கில் பெரும்பான்மைத் தீர்ப்பு வழங்கிய நால்வரில் ஒருவர்.

'ஹேபியஸ் கார்பஸ்' தீர்ப்பை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு எழுதியபோது ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் டி.ஒய். சந்திரசூட் இவ்வாறு குறிப்பிடுகிறார் “ஏடீஎம் ஜபல்பூர் வழக்கில் பெரும்பான்மையாக நான்கு நீதிபதிகள் (அவரின் தந்தை உட்பட) வழங்கியத் தீர்ப்பு மிகவும் பிழையானது. வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் என்பது மனித இருப்பிற்குத் தவிர்க்க இயலாதது. எனவே, அந்தத் தீர்ப்பு நிச்சயம் ரத்து செய்யப்பட வேண்டியது”.

'தனியுரிமை' என்பது வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தோடு இணைந்தது, மேலும் இவை இயல்பாகவே இந்திய அரசியலமைப்பில் மூன்றாவது பிரிவின் கீழ் உறுதிசெய்யப்பட்டுள்ள பல்வேறு அடிப்படை சுதந்திரங்களின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. 'தனியுரிமை' பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு 'தனியுரிமை என்பது அடிப்படை உரிமை தான்' எனத் தீர்ப்பளித்து தற்போது ஓராண்டு முடிந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகப் போற்றப்பட்ட இந்தத் தீர்ப்பு, தற்போது நிலுவையில் உள்ள ஆதார் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் தீர்ப்பையும் தீர்மானிப்பதாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!