வெளியிடப்பட்ட நேரம்: 09:04 (26/08/2018)

கடைசி தொடர்பு:09:04 (26/08/2018)

`பிரதமரின் பெயரை மாற்றுங்கள்; ஓட்டு கிடைக்கும்' - பா.ஜ.க-வை கிண்டல் செய்யும் கெஜ்ரிவால்!

பிரதமரை மாற்ற வேண்டும். அப்போது தான் பா.ஜ.கவுக்கு ஓட்டு கிடைக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கிண்டலாக கூறியுள்ளார். 

கெஜ்ரிவால்

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ம் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தல் என்ற இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையடுத்து அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகப் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கும் அவரது பெயர் சூட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கர் தலைநகர் புதிய ராய்ப்பூரை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவைப் போற்றும்வகையில், 'அடல்நகர்' என்று மாற்ற அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் டெல்லி ராம்லீலா மைதானத்துக்கு வாஜ்பாயின் பெயரைச் சூட்ட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான செய்திகள் வெளியானவுடன் வாஜ்பாய் பெயரை பயன்படுத்தி பா.ஜ.க வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது என சில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த தகவலை வைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியையும், பாஜகவையும் கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``ராம் லீலா மைதானத்துக்கு வாஜ்பாய் பெயரை மாற்றுவதற்குப் பதில் பிரதமரின் பெயரை மாற்றினால் பா.ஜ.கவுக்கு ஓட்டுகள் கிடைக்கும். ஏனெனில் தற்போதுள்ள மோடியின் பெயருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்" எனக் கிண்டலாக தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க