`இது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தும்' - ரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்கும் அனில் அம்பானி!

ரஃபேல் போர் விமான விவகாரத்தில் தனது நிறுவனத்துக்கு நேஷ்னல் ஹெரால்டு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக ரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடுகேட்டு அனில் அம்பானி வழக்குத் தொடர்ந்துள்ளார். 

அனில் அம்பானி

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. கடந்த காங்கிரஸ் ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட அதிகமான தொகைக்கு தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பது காங்கிரஸின் கட்சியின் குற்றச்சாட்டு. இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட அனில் அம்பானியின் `ரிலையன்ஸ் டிபன்ஸ்' நிறுவனத்துக்கும் இந்த  ஊழலில் தொடர்புள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. நாடாளுமன்றம், பிரசார கூட்டங்கள் என ராகுல் காந்தி செல்லும் இடங்களிலெல்லாம் இந்த விவகாரத்தில் பாஜகவை வறுத்தெடுத்து வருகிறார். இதுதொடர்பாக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையிலும் கட்டுரை வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை மீது ரூ.5 ஆயிரம் கோடி நஷ்ட ஈடுகேட்டு அனில் அம்பானியின்  `ரிலையன்ஸ் டிபன்ஸ்' நிறுவனம் ஆமதாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ``ரஃபேல் தொடர்பான நேஷ்னல் ஹெரால்டு கட்டுரையில் எங்கள் நிறுவனத்துக்கு களங்கமும், அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது மக்களுக்குத் தவறான தகவலைக் கொண்டு சேர்த்துள்ளது. இதனால் எங்கள் மீது மக்களுக்கு எதிர்மறை பிம்பம் ஏற்படும். எனவே இதற்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்த மாதம் 7ம் தேதிக்குப் பதிலளிக்க வேண்டும் நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகைக்கு உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!