வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/08/2018)

கடைசி தொடர்பு:17:40 (26/08/2018)

`வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய மீனவர்!’ - நேரடியாகத் தொடர்புகொண்டு நெகிழவைத்த கேரள முதல்வர்!

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு காரணமாக தங்கள் உடைமைகளை இழந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள போராடிய மக்களைக் காப்பாற்றியதில் மீனவர்களின் பங்கு அளப்பரியது. முப்படை வீரர்களுடன் கைகோத்து மீனவர்கள் ஆற்றிய பங்கு மனிதநேயத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அப்படி, பலரது உயிரைக் காப்பாற்றியவர்தான் மீனவர் ரத்னக் குமார். 

பினராயி விஜயன்

வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்த மாவட்டங்களில் பத்தனம்திட்டாவும் ஒன்று. அதிலும், பண்டநாட் என்ற பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள், மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். ஆபத்தில் தத்தளித்த பல பேரை தனது முயற்சியால் காப்பாற்றினார் ரத்னக் குமார். மீட்புப் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரத்னக் குமார் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் முதல்வர் தன்னுடன் பேசுவார் என்று. முன்னதாக, மீட்புப் பணிகளில் பெரிதும் உதவிய மீனவர்களுக்கு அரசு சார்பாக ரூ.3,000 வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவந்த ரத்ன குமாரை போன் மூலம் நேரடியாகத் தொடர்பு கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், ரத்னக் குமாரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதனால், மகிழ்ச்சியில் திக்குமுக்காடி விட்டனர் ரத்னக் குமாரின் குடும்பத்தினர்.