”70 குழந்தைகள் மரணத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது” - முதல்வர் யோகி ஆதித்யநாத் | UP Chief minister says that there is internal politics in infants dead in government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (27/08/2018)

கடைசி தொடர்பு:09:50 (27/08/2018)

”70 குழந்தைகள் மரணத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது” - முதல்வர் யோகி ஆதித்யநாத்

'கோரக்பூர் மருத்துவமனையில், 70 குழந்தைகள் மரணத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது' என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

முதல்வர் யோகி ஆதித்யநாத்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா பகவாந்தாஸ் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் குறைபாட்டால், இரண்டு நாள்களில் மட்டும் சுமார் 70 பச்சிளம் குழந்தைகள் பலியாகின. இந்தச் சம்பவம், மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இது தொடர்பான விசாரணையில், ஆக்சிஜன் வினியோகம் செய்யும் நிறுவனத்துக்குப் பணம் அளிக்காத காரணத்தால் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதாகத் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் கைதான டாக்டர். கஃபீல்கான், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒருவருடம் ஆகியுள்ள நிலையில், நேற்று இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “கடந்த வருடம் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும், சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை அனுப்பி உடனடியாக அறிக்கை தாக்கல்செய்யச் சொன்னேன். அதன் பின்னர், அடுத்த நாளே நான் அங்கு சென்றேன். அங்கிருந்தவர்களிடம் உண்மையில் என்ன நடந்தது எனக் கேட்டேன். 'ஊடகங்களில் வெளியான செய்திபோன்று எதுவும் நடவிக்கவில்லை' என்று அவர்கள் தெரிவித்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் மரணம் நிகழ்ந்திருக்கும் என்றால், வெண்டிலேட்டரில் இருக்கும் குழந்தைகள்தானே முதலில் இறந்திருக்க வேண்டும். இதுபோன்ற தகவல்கள் வெளியானதில், அரசியல் உள்நோக்கம் உள்ளது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், அங்குள்ள மருத்துவர்கள் பணி செய்யவே சிரமப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக கவுன்சிலிங் வழங்கப்பட்டது. நீங்கள் தவறு செய்யவில்லை என்றால், இதுகுறித்து நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தோம்” என்றார். 

எனினும், இது தொடர்பாகத் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த மருத்துவர்  கஃபீல்கான், முதல்வர் யோகி ஆதித்யநாத் பொய் சொல்வதாகச் சாடினார். “அறிக்கைகள் தெளிவாக உள்ளன. ஆக்சிஜன் குறைபாடே காரணம் என அலகாபாத் உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அரசின் பதிலும் ஆக்சிஜன் குறைபாடும்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளது” என்றார்.