கேரளா உட்பட 5 மாநிலங்களில் மழைக்கு எத்தனை பேர் உயிரிழப்பு?- மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

இந்த வருடம் பெய்த தென்மேற்குப் பருவமழைக்கு, இந்தியா முழுவதும் சுமார் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கேரளா மழை

கேரளாவில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்ததாலும், மற்ற மாநிலங்களிலும் கனமழை பெய்துள்ளது. கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களில், 600 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த வருடம் இந்தியா முழுவதும் வெள்ளம், மழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை 993 பேர் உயிரிழந்துள்ளனர். 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தென்மேற்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளா இல்லாமல் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களும் கடும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. கேரளாவில்தான் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 204, மேற்கு வங்கத்தில் 195, கர்நாடகாவில் 161, அஸ்ஸாமில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளாவில் மட்டும் 54 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14.52 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் 11.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 2.45 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக இருந்தது. ஆனால், இந்த வருடம் அது குறைந்துள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் நிகழ்ந்த பிறகு, அந்த மாநிலங்களுக்கு உதவித்தொகை அறிவிக்காமல், அந்த வருடத்தின் பட்ஜெட் கூட்டத்திலேயே பேரிடருக்கான தனி உதவித்தொகை அறிவிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!