`முதலில் எனது கிரிக்கெட் பேட்டைத்தான் எடுத்தேன்'- வீட்டை இழந்த கேரள வீராங்கனை உருக்கம்! | "only cricket" in my mind - Sajna

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (27/08/2018)

கடைசி தொடர்பு:13:05 (27/08/2018)

`முதலில் எனது கிரிக்கெட் பேட்டைத்தான் எடுத்தேன்'- வீட்டை இழந்த கேரள வீராங்கனை உருக்கம்!

‘நள்ளிரவில் கண்விழித்தேன். வீட்டின் தரைதளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது. நான் முதலில் தேடியது என் கிரிக்கெட் மட்டையைத்தான்.’ கேரள கிரிக்கெட் வீராங்கனையின் வார்த்தைகள்.

கேரள கிரிக்கெட் வீராங்கனை சஜனா

Photo Credit: ICC

கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர், சஜ்னா. 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான கேரள மாநில பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன். நவம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்கப் போராடிவரும் வீராங்கனைகளில் ஒருவர்தான் சஜ்னா. கடந்த சில நாள்களுக்கு முன்னர் பயிற்சி முடிந்து வீராங்கனைகள் அனைவரும் மாலை வேளையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, தொலைக்காட்சியில் கேரளா வெள்ளம்குறித்த செய்தி ஒளிபரப்பாகியுள்ளது. சஜ்னா மிகவும் அமைதியாக இருந்துள்ளார். யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஏனெனில், அந்தப் பேரிடரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் அவர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.

சஜனா வீடு

சஜ்னா,  பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்துவருகிறார். அவரது அப்பா ரிக்‌ஷா ஓட்டுநர். அம்மா அரசுப் பணியாளராக உள்ளார். இதுதொடர்பாக சகவீராங்கனையிடம் உருக்கமாகப் பேசியுள்ள சஜ்னா, “நள்ளிரவில் நான் கண் விழித்தேன். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வீட்டின் தரைதளம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருந்தது.  எங்களை மீட்பதற்காகப் படகுகள் வந்தன. நான் முதலில் எனது கிரிக்கெட் மட்டையையும் கிட்டையும் தான் கையில் எடுத்தேன். அந்தக் கடினமான சூழ்நிலையிலும் கிரிக்கெட் தான் என் நினைவில் இருந்தது” என்றார். சஜ்னா தற்போது பெங்களூரில் தங்கியுள்ளார். அவரது குடும்பத்தினர் வீடுகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இதேபோல, வயநாட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான மின்னு மணி, வெள்ளத்தால் தனது குடும்பம் சந்தித்துள்ள பாதிப்புகுறித்துப் பேசியுள்ளார். இவர், தனது பெற்றோர் சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்துவருகிறார். இவரது இல்லம் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. விவசாயமே இவர்களது வாழ்வாதாரம். பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது.

இதுகுறித்து மின்னு மணி கூறுகையில், “நாங்கள் ஒரு புதிய வீட்டை உருவாக்க முயல்கிறோம். ஆனால், அது மிகவும் சேறு நிறைந்ததாக இருக்கிறது, தண்ணீர் வடிந்த பிறகே பழுதுபார்க்கும் வேலையைத் தொடங்க முடியும்'' என்றார்.

இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் தங்களின் நாட்டுக்காக விளையாடுவதற்காக, இந்த வீராங்கனைகள் முனைப்புடன் உள்ளனர். சோகங்களை மறைத்துக்கொண்டு, தங்களது கனவுகளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.