கௌரிலங்கேஷ், தபோல்கர் கொலையை ஒரே குழு செய்திருக்கலாம்! - சி.பி.ஐ கணிப்பு

'பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையையும், பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் கொலையையும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்களே செய்திருக்கலாம்' என சி.பி.ஐ தெரிவித்துள்ளது. 

கௌரி லங்கேஷ்

புனேவைச் சேர்ந்த பகுத்தறிவாளரான நரேந்திர தபோல்கர், கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி காலை நடைப்பயிற்சி செய்யும்போது சில மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதே போன்று பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5ம் தேதி, தன் வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரண்டு வழக்கையும் சி.பி.ஐ விசாரித்துவருகிறது. 

தபோல்கர் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சச்சின் ஆண்ட்ரூ என்பவரிடம் நடந்த விசாரணையில், ஒரு துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களை கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவரிடம் அளித்ததாகக் கூறியுள்ளார். இதனால், கௌரி லங்கேஷ் மற்றும் தபோல்கர் கொலையை ஒரே குழுவினர் செய்திருக்கலாம் என சி.பி.ஐ சந்தேகித்துள்ளது. 

சச்சின் ஆண்ட்ரூவின் காவலை நீட்டிக்கக் கோரிய வழக்கில், இதை சி.பி.ஐ தெரிவித்துள்ளது.  ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ஆண்ட்ரூவின் காவலை நீடித்துள்ளது சிறப்பு நீதிமன்றம். கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவரையும், தபோல்கர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டவரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது சி.பி.ஐ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!