வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (27/08/2018)

டேராடூன் டு டெல்லி! - வெற்றிகரமாகப் பறந்த உயிரி எரிபொருள் விமானம்

ந்தியாவின் முதல் உயிரி எரிபொருள் (Bio-fuel) விமானம், இன்று டேராடூனில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

விமானம்

விமானப் பயணச் செலவுகளைக் குறைப்பதற்காக இயற்கை மூலப் பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட எரிபொருளைக் கொண்டு இந்தியாவின் முதல் விமானம் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. 72 இருக்கைகள் கொண்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இந்தச் சோதனை நடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனிலிருந்து டெல்லி வரையில் விமானம் இயக்கப்பட்டது. 

இன்று இயக்கப்பட்ட விமானத்தின் உயிரி எரிபொருள், டேராடூனில் உள்ள இந்தியப் பெட்ரோலிய நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தச் சோதனை ஓட்டத்தில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அதிகாரிகள் உட்பட மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர். 25 நிமிட பயணத்துக்குப் பிறகு, டெல்லியைச் சென்றடைந்தது விமானம். அங்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், சுரேஷ் பிரபு உள்ளிட்டவர்கள் விமானத்தை வரவேற்றனர். 

இன்றைய சோதனை ஓட்டத்தில், சாதாரண விமான எரிபொருளுடன் காட்டாமணக்கு எண்ணெய் கலந்து இயக்கியுள்ளனர். இந்தப் பணியில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 500 விவசாயக் குடும்பங்கள் ஈடுபட்டிருந்தனர். 75 சதவிகிதம் விமான எரிபொருளுடன் 25 சதவிகித காட்டாமணக்கு எண்ணெய் கலக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

' உயிரி எரிபொருளானது, தேவையற்ற புதுப்பிக்கக்கூடிய விவசாயக் கழிவுகள், சமையல் அல்லாத எண்ணெய், தொழிற்சாலை மற்றும் நகராட்சி கழிவுகளின் மூலம் தயாரிக்கப்படும்' என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 'இதன் மூலம் விமானப் பயணத்தால் ஏற்படக்கூடிய மாசு மற்றும் பயணச் செலவுகளைக் வெகுவாகக் குறைக்க முடியும்' எனக் கூறியுள்ளது.