வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (27/08/2018)

கடைசி தொடர்பு:16:05 (27/08/2018)

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு - இரண்டு பேர் குற்றவாளிகள்; மூவர் விடுதலை!

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

கோத்ரா ரயில் எரிப்பு

இந்த ரயில் எரிப்புச் சம்பவம், அதற்குப் பின்னர் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகளும் தனித்தனியே பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதில், ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகக் கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டும், 63 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்ட 31 பேரில் 11 பேருக்கு மரணதண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. 

இதில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பலர், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த மேல்முறையீடு மீதான விசாரணை, குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே, சிறப்பு புலனாய்வு குற்றம் சாட்டப்பட்ட 94 பேருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியபோது ஆறுபேர் தலைமறைவாகினர். பின்னர் சில நாள்களுக்குப் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் மூவரை விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. 6 பேரில் ஒருவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க