கேரள மக்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி - பாட்டுப் பாடி அசத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் | supreme Court Judge Kurian Joseph Sing For Kerala Flood Relief

வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (28/08/2018)

கடைசி தொடர்பு:11:16 (28/08/2018)

கேரள மக்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி - பாட்டுப் பாடி அசத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரளாவுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் மற்றும் கே. எம் ஜோசப் ஆகிய இருவரும் பாட்டுப் பாடி அசத்தினர். 

குரியன் ஜோசப்

கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாடு முழுவதும் இருந்து நிவாரண நிதி வந்து குவிந்துகொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாது, தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எனப் பலரும் நிதி திரட்டிவருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லி உச்ச நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சார்பில் நிதி திரட்டும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சி தொடங்கியதும், உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியான குரியன் ஜோசப், கேரள வெள்ளச் சேதம் பற்றிய பாடலை மிகவும் உருக்கமாகப் பாடினார். ஜோசப் இந்தப் பாடலை பாடும்போது, அரங்கத்தில் இருந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  மற்றும் அனைவரும் சேர்ந்து பாடினர். பின்னர் பேசிய குரியன் ஜேசப், “ முன்னதாக வழக்கறிஞர்கள் சார்பாக இரண்டு முறை கேரளாவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இந்த நிகழ்ச்சிமூலம் 10 லட்ச ரூபாய் நிதி சேர்ந்துள்ளது. இதை விரைவில் கேரளாவுக்கு அனுப்ப உள்ளோம்” என்று கூறினார். இதையடுத்து, சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட கே.எம்.ஜோசப், மலையாளப் பாடல் ஒன்றைப் பாடினார்.