‘14 நாள்களில் ரூ.713.92 கோடி..!' - கேரளாவை மீட்டெடுக்கக் குவியும் நிதி

கேரளாவில், இந்த ஆண்டு கொட்டித்தீர்த்த வரலாறு காணாத மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை கேரள மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். அதே வேளை, தண்ணீரிலும் கண்ணீரிலும் தத்தளித்த மக்களுக்காக, மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய ஆயிரக்கணக்கான நல்ல உள்ளங்களும் அதிகம். 

கேரளா

கேரள வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை, கடுமையான  சேதத்தை ஏற்படுத்திவிட்டது. வெள்ளம், நிலச்சரிவு, போக்குவரத்து சாலைகள் துண்டிப்பு என மழையால் ஏற்பட்டிருக்கும் சேதம் எண்ணில் அடங்காதவை. இதனிடையே, வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. 

 கேரளாவை மறுசீரமைக்கவும், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, மருந்து உள்ளிட்ட நிவாரண உதவிகளுக்காக முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு பல தரப்பிலும் இருந்து நிதியுதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து சுமார் 3.91 லட்சம் பேர் கேரளாவுக்காக நிதியுதவி அளித்துள்ளனர். 

நிவாரண பொருள்கள்

அதிலும், PayTm மூலமாக ரூ.43 கோடி, ஸ்டேட் வங்கியில் ரூ. 518.24 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு UPls வழியாக ரூ.132.63 கோடி வந்துள்ளது. இதைத் தவிர, ரொக்கமாகவும் காசோலையாகவும் ரூ.20 கோடி பெறப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 14 நாள்களில் மட்டும் மொத்தமாக ரூ.713.92 கோடி நிவாரண நிதியாக வந்துள்ளது. இந்த நிதி, கேரளாவுக்காக மத்திய அரசு அறிவித்த முதற்கட்ட நிவாரண நிதியைக் காட்டிலும் அதிகம். வெள்ளப்பாதிப்பில் சிக்கிய கேரளாவை மீட்டெடுக்க அதிக அளவில் நிதி வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!