`மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட ஊசியால் பறிபோன உயிர்' - அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த அவலம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு ஒரே ஊசியைப் பயன்படுத்தி உள்ளனர். 

ஊசி

மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பொது மருத்துவமனையில் நேற்று கடுமையான காய்ச்சல் காரணமாக இம்தாத் சிங் என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, ஊசி போட்டுள்ளனர். ஊசி போட்ட 5 நிமிடத்தில் அவர் உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 25 பேர் கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனிடையில், சிகிச்சைக்காக வந்த 25 நோயாளிகளின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததை அடுத்து அவர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் இம்தாத் சிங் என்பவர்க்குத் தவறான ஊசியைச் செவிலியர்கள் போட்டதால்தான் அவர் உயிரிழந்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்தனர். அப்போது, செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களைக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் எங்களிடம் முறையிட்டனர். இம்தாத் சிங் உடலைப் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' எனக் கூறினார். 

இந்த விவகாரம் தொடர்பாக பி.கே.ஷர்மா என்ற மருத்துவர் கூறுகையில், `நோயாளிகள் அனைவருக்கும் ஒரே ஊசியைத்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக, ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை மீண்டும் மற்ற நோயாளிக்குப் பயன்படுத்த வேண்டும் என்றால் நன்கு காய்ச்சிய சுடுநீரில் போட்டு, அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும். ஆனால், செவிலியர் இதைச் செய்யவில்லை. அதனால்தான் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார். எனினும், இந்தக் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக விசாரனை நடைபெறும் என்று மருத்துவமனை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!