மோடியைக் கொல்ல ரூ.8 கோடி... எம்-4 ரக துப்பாக்கி... ஹைதராபாத்தில் எழுத்தாளர் கைது

பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக எழுத்தாளர் வரவர ராவ் ஹைதராபாத் நகரில் புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோடியை கொல்ல திட்டம் வரவரராவ் கைது

பிரதமர் மோடியை ராஜீவ் காந்தி பாணியில் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக செய்தி பரவி வரும் நிலையில்,  ஹைதராபாத்தில் உள்ள எழுத்தாளர் வரவர ராவ் வீட்டில் இன்று காலை முதல் புனே போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஹைதராபாத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் பிற மொழி பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியநாராயணா உட்பட 8 பேர் வீடுகளில் இந்தச் சோதனை நடைபெற்றது. இவர்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் இருவரது வீடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. வீட்டுக்குள் போலீஸார் நுழைந்ததும் வெளியுலகத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் யாருடனும் போனில் தொடர்புகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.  சோதனை முடிவில் எழுத்தாளர் வரவர ராவ் கைது செய்யப்பட்டார்.  

பிரதமர் மோடியை கொல்லத் திட்டம்

மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதத்தில் பிமா- கோரேகான் கலவரச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைப் போராளி ரோனா ஜேக்கப் வில்சன் என்பவர் புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.  2017-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதியிடப்பட்ட இந்தக் கடிதம் 'ஆர்' என்ற பெயரில் மாவோயிஸ்ட் தலைவர் பிரகாஷ் என்பவருக்கு எழுதப்பட்டுள்ளது. கடிதத்தில் இந்த ஜூன் மாதத்தில் மோடியைக் கொல்லும் திட்டத்துக்கு நிதி திரட்டி தரும்படி வரவர ராவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மோடியைக் கொல்ல ரூ.8 கோடி தேவை எனவும் M-4 ரகத் துப்பாக்கி வாங்க வேண்டும். இதற்கான குண்டுகள் வாங்க தனியாக ரூ.4 லட்சம் தேவை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மோடி பங்கேற்கும் பேரணிகளில் நம் திட்டத்தை அரங்கேற்றலாம் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

வரவர ராவ் கூறுகையில் `` மனித உரிமைப் போராளி என்ற வகையில் வில்சன் எனக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால், போலியான கடிதத்தை வைத்துக்கொண்டு பாரதிய ஜனதா அரசு பழிவாங்குகிறது'' என்று கூறியுள்ளார். 

மொத்தம் 5 மாநிலங்களில் நடந்த அதிரடி சோதனையின் முடிவில்  ஏராளமானோர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.. மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜையும் மகாராஷ்டிரா மாநில போலீஸ் கைது செய்துள்ளது. டெல்லி பதர்பூரில் இவரின் வீட்டை சோதனையிட்ட போலீஸார்  சில ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அதனடிப்படையில் சுதா பரத்வாஜ் மற்றும் அவரின் மகள் அனு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!