`உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்' - கேரள மீனவர்களைக் கௌரவித்த ராகுல் காந்தி!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் ஆரம்பிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி

தனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைச் சந்திப்பதற்காக இன்று கேரளா சென்றார். அதன்படி ஆலப்புழா, செங்கானூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டவர், முகாம்களில் தங்கியிருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கேரள வெள்ளத்தில் சிறப்பாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, ஆரத்தழுவிக் கௌரவித்தார். தொடர்ந்து மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல், ``இனி இதுபோன்ற பேரிடர் காலங்களில் மீனவர்களின் பணியை மீட்புப்படையினர் பயன்படுத்திக்கொள்வார்கள். அந்த அளவுக்கு இங்கு ஏற்பட்ட பாதிப்பின்போது மீனவர்கள் சேவையாற்றியுள்ளீர்கள். 

3,000 மீனவர்கள் 70,000 மக்களைக் காப்பாற்றியுள்ளனர். இது ஒன்றும் சாதாரண காரியம் கிடையாது. உங்களால்தான் பெருமளவு மக்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். இதைப் பெருமைப்பட கூறுவேன். அதேநேரம் உங்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களின் பணிக்கு நான் எப்போதும் தலைவணங்குகிறேன். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் உருவாக்கப்படும். எனக்குப் பொய் வாக்குறுதி அளிப்பது பிடிக்காது. நாட்டின் கட்டமைப்பில் மீனவர்களின் பங்கு முக்கியம். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தனி அமைச்சகம் உருவாக்கப்படும்" என நெகிழ்ந்து கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!