``ஆர்.எஸ்.எஸ் தவிர மற்ற தொண்டு நிறுவனங்களை மூடிவிடுங்கள்' - ராகுல் காந்தி ஆவேசம்!

'புதிய இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடிவிடுங்கள்' என்று ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி


1817ல் பேஷ்வா ராணுவத்துக்கு எதிரான போரில் இறந்துபோன மஹர் இன மக்களை நினைவுகூரும் வகையில், 2-வது நூற்றாண்டு விழா கடந்த வருடம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில்  கலவரம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.  பொதுச்சொத்துகள் பலத்த சேதமாகின. இந்த நினைவு தினப் பேரணியில் நடந்த கலவரத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கூறி 9 செயற்பாட்டாளர்கள் வீட்டில் புனே போலீஸார் சோதனை நடத்தினர். அதில் 5பேரைக் கைதுசெய்தனர். மேலும், டெல்லி, பரீதாபாத், கோவா, ராஞ்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அறிவுஜீவிகள், செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மனித உரிமை செயற்பாட்டாளார் மற்றும் ஊடகவியலாளரான கௌதம் நவலகா, ஹைதராபாத்தைச் சேர்ந்த எழுத்தாளார் வரவரா ராவ், மும்பையைச் சேர்ந்த வெர்னோன் மற்றும் அருண், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகியோர் வீடுகளிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட கைது நடவடிக்கைகளுக்கு பல தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.  இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``புதிய இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் என்ற ஒரே ஒரு தொண்டு நிறுவனத்துக்கு மட்டுமே இடமுள்ளது. மற்ற அனைத்து தொண்டு நிறுவனங்களையும் இழுத்து மூடிவிடுங்கள். அனைத்து சமூக செயற்பாட்டாளர்களையும் சிறையில் தள்ளிவிடுங்கள். எதிர்ப்பு தெரிவித்தால் சுட்டுவிடுங்கள். புதிய இந்தியா உங்களை வரவேற்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.
 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!